ரஷ்யாவின் போர்க் குற்றங்களைக் கண்டிக்க மறுக்கும் ஹங்கேரிய ஜனாதிபதியைச் சாடும் போலந்து ஜனாதிபதி.
போலந்து ஜனாதிபதி யாரெஸ்லோவ் கஸின்ஸ்கி உக்ரேன் மீது ஆக்கிரமித்த ரஷ்யாவின் நடவடிக்கையைக் கண்டிக்க மறுத்து வரும் ஹங்கேரிய ஜனாதிபதியைக் கடுமையான வார்த்தைகளால் சாடியிருக்கிறார். “புச்யா நகரில் ரஷ்ய இராணுவம் செய்திருக்கும் அட்டூழியங்களைப் பார்த்த பின்னரும் ஒர்பான் உக்ரேனில் நடப்பதைப் புரிந்துகொள்ளாவிட்டால் அவர் ஒர் கண் மருத்துவரைப் பார்ப்பது நல்லது,” என்று கஸின்ஸ்கி வானொலிப் பேட்டியொன்றில் குறிப்பிட்டிருக்கிறார்.
உக்ரேன் மீதான ஆக்கிரமிப்பை எதிர்த்து நிற்க அவர்களுக்கு ஆயுத உதவிகள் வழங்க மறுக்கும் பக்கத்து நாடுகளில் கடந்த வாரத் தேர்தலில் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றிய விக்டர் ஒர்பானின் ஹங்கேரி மட்டுமே. அவர்களின் இந்த நிலைப்பாடு தமக்கு ஏமாற்றத்தையும், வேதனையையும் தருவதாக போலந்து ஜனாதிபதியும், பிரதமரும் தெரிவித்திருக்கிறார்கள்.
ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவர்களில் வலதுசாரிப் பழமைவாதக் கட்சிகளால் ஆளப்படும் நாடுகள் போலந்தும், ஹங்கேரியும் ஆகும். பல வருடங்களாகவே ஒன்றியத்தின் மத்திய அரசுக்கு முரணாக நடப்பதில் இவ்விரண்டு நாட்டின் தலைவர்களும் ஒன்றிணைந்திருந்தார்கள். போலந்தும், ஹங்கேரியும் தமக்குள் பல வர்த்தக ஒப்பந்தங்களையும் செய்துகொண்டு இயங்கி வந்தார்கள்.
இனிமேல், தொடர்ந்தும் ஹங்கேரியுடன் சேர்ந்து கூட்டுறவாகச் செயற்படுவது நடக்காத காரியம் என்று போலந்துப் பிரதமர் சில நாட்களுக்கு முன்னர் குறிப்பிட்டிருந்தார். தேர்தலில் வென்ற ஒர்பான் தொடர்ந்தும் தான் போலந்துடன் நெருங்கிச் செயற்பட விரும்புவதாகத் தெரிவித்திருந்தார்.
ஹங்கேரியத் தலைவர் ஒர்பான், உக்ரேன் ஜனாதிபதி செலின்ஸ்கியை சமீபத்தில் தனது எதிரிகளில் ஒருவர் என்று சித்தரித்திருந்தார். ஹங்கேரியின் புத்தின் ஆதரவு நிலைப்பாட்டால் போலந்தும், செக் குடியரசும் ஹங்கேரியில் சமீபத்தில் நடந்த பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாட்டைப் புறக்கணித்திருந்தன.
சாள்ஸ் ஜெ. போமன்