குஜராத்தின் ஜாம்நகரில் பாரம்பரிய மருந்துகளுக்கான சர்வதேச மையம் திறந்துவைக்க வரும் ஜாம்பவான்கள்.
உலக மக்கள் ஆரோக்கிய அமைப்பினால் குஜராத்தின் ஐந்தாவது பெரிய நகரான ஜாம்நகரில் பாரம்பரிய மருந்துகளுக்கான சர்வதேச மையம் 19.04 செவ்வாயன்று திறந்துவைக்கப்படவிருக்கிறது. உலகளவில் பாரம்பரிய மருத்துவங்களுக்காக ஆரம்பிக்கப்படவிருக்கும் ஒரேயொரு மையமான அதற்கான அடிக்கல்லை நாட்டப் பாரதப் பிரதமருடன் இணையவிருக்கிறார் உலக மக்கள் ஆரோக்கிய அமைப்பின் நிர்வாகத் தலைவர் தெட்ரோஸ் கபிரியேசுஸ். அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவிருக்கும் மேலுமொரு முக்கியத்துவர் மொரீஷியஸ் நாட்டுப் பிரதமர் பிரவிந்த் ஜகுநாத்.
புதனன்று காந்திநகரில் நடக்கவிருக்கும் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட தயாரிப்புக்களுக்கான முதலீடு, ஆராய்ச்சி பற்றிய மாநாடு ஒன்றிலும் மோடியுடன் தெட்ரோஸ் கபிரியேசுஸ் கலந்துகொள்வார்.
வியாழனன்று தனது முதலாவது குஜராத் விஜயத்துக்காக ஆமதாபாத்தில் விமானமிறங்கவிருப்பவர் ஐக்கிய ராச்சியத்தின் பிரதமர் போரிஸ் ஜோன்சன். அங்கே அவர் தொழிலதிபர் கௌதம் அதானியைச் சந்திப்பதுடன் சபர்மதி ஆசிரமத்துக்கும் விஜயம் செய்யவிருக்கிறார். கட்டடத் தொழில்நுட்ப இயந்திரங்களுக்கான உலகின் மிகப் பெரிய நிறுவனங்களில் ஒன்றான JCB-யின் தயாரிப்பு மையமொன்று வடோடாராவில் இருக்கிறது. ஜோன்சன் அந்த மையத்துக்கும் விஜயம் செய்யவிருக்கிறார்.
தனது விஜயத்தின்போது இரண்டு நாடுகளுக்கிடையேயும் வர்த்தகத்தை வளர்க்கும் பல திட்டங்களை அவர் அறிவிக்கவிருப்பதாகத் தெரிகிறது. ஐக்கிய ராச்சியத்தில் வாழும் பெரும்பாலான இந்தியர்கள் குஜராத்தைச் சேர்ந்தவர்களாகும். எனவே அவரது குஜராத் விஜயம் பிரத்தியேகமாக வரவேற்கப்படுகிறது.
“இவ்வாரம் நான் எமது மிக முக்கிய வர்த்தக நட்பு நாடான இந்தியாவுக்கு விஜயம் செய்யவிருக்கிறேன். சர்வதேச நிலைமை ஸ்திரமாக இல்லாத இக்காலத்தில் எம் இரண்டு நாடுகளின் எதிர்கால வளர்ச்சிக்கும் உதவக்கூடிய திட்டங்களை நாம் அறிவிப்போம்,”என்று போரிஸ் ஜோன்சன் தனது இந்திய விஜயம் பற்றிப் பெருமையுடன் குறிப்பிட்டிருக்கிறார்.
சாள்ஸ் ஜெ. போமன்