பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையேயான முரண்பாடுகள் வலுக்கின்றன.
கடந்த வருடம் ஆப்கானிஸ்தான் தலிபான்களின் கைவசப்பட்டதும் அவர்களுடன் முதல் முதலாக உறவை நெருக்கமாக்கிக் கொண்ட நாடு பாகிஸ்தான் ஆகும். ஆப்கானில் வாழ்ந்துவந்த பழமைவாத இஸ்லாமியத் தீவிரவாதிகள் இரண்டு நாடுகளுக்கும் இடையேயிருக்கும் எல்லை மூலமாகப் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்துவது வழக்கமாக இருந்தது. அதை நிறுத்தவே ஆப்கான் தலிபான்களின் உதவியை நாடியது அப்போதைய பாகிஸ்தானின் இம்ரான் கான் தலைமையிலான அரசு. ஆனால், அது வெற்றிகரமாக முடியவில்லை.
பாகிஸ்தானிலும் ஒரு கடுமையான இஸ்லாமிய எமிராத்தை அமைக்கப் போராடி வருபவர்களை எல்லை தாண்டி ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்து நீண்ட காலமாகத் தாக்கி வந்தது பாகிஸ்தான் இராணுவம். தலிபான்கள் ஆட்சியமைத்ததும் தமது மண்ணிலிருந்து எவரும் வேறு நாடுகள் மீது தாக்குதல் நடத்தமாட்டார்கள் என்று பல தடவைகள் உறுதியளித்திருந்தார்கள். ஆனால், தாக்குதல்கள் தொடரவே பாகிஸ்தான் இராணுவம் பொறுமையிழந்திருப்பதாகத் தெரிகிறது.
கிழக்கு ஆப்கானிஸ்தானிலிருக்கும் கோஸ்ட், குனார் மாகாணங்கள் மீது பாகிஸ்தானிய விமானங்கள் தாக்குதல் நடத்தின. அத்தாக்குதல்களில் சுமார் 50 பேர் இறந்திருப்பதாக தலிபான்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். இறந்தவர்களில் பலர் சாதாரண குடிமக்கள் என்றும் பல பெண்களும் குழந்தைகளும் என்றும் தலிபான்கள் குறிப்பிடுகிறார்கள். பாகிஸ்தான் அரசு அதை இன்னும் ஊர்ஜிதம் செய்யவில்லை.
சமீப காலத்தில் ஆப்கானிஸ்தானில் இருந்து பாகிஸ்தானுக்குள் நுழைந்து பாகிஸ்தான் பொலீசாரையும், இராணுவ மையங்களையும் தாக்கி வருகிறார்கள் தீவிரவாதிகள் என்று பல தடவைகள் பாகிஸ்தான் குற்றம் சாட்டி வருகிறது. கடந்த வார இறுதியில் ஏழு பாகிஸ்தான் பொலீசார் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டதாக பாகிஸ்தானின் வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டது. அதைத் தடுப்பது ஆப்கானிஸ்தானின் கடமை என்று பாகிஸ்தான் கடுமையாகக் கோரி வருகிறது.
தலிபான்களோ தாம் பாகிஸ்தானுடைய எல்லைக்குள் எவரும் நுழையாமல் தடுத்திருப்பதாகச் சொல்லிவருகிறது. தனது எல்லையில் உயரமான முள்வேலியை கடந்த சில வருடங்களாகவே பாகிஸ்தான் எழுப்பி வருகிறது. ஆனால், இரண்டு நாடுகளின் எல்லை எங்கே இருக்கவேண்டும் என்பதில் இரு சாராருக்கும் உரசல் இருப்பதால் தலிபான்கள் அதை எதிர்த்து வருகிறார்கள்.
தலிபான்களுக்கும் பாகிஸ்தான் இராணுவத்தினருக்கும் சமீப மாதங்களில் இதனால் மோதல்கள் ஏற்பட்டிருக்கின்றன. எல்லையிலிருக்கும் காவல் நிலையங்கள் மூடப்பட்டு ஆப்கானிஸ்தானியர்கள் தமது விவசாயப் பொருட்களைப் பாகிஸ்தானுக்குள் எடுத்துச் செல்வது தடுக்கப்பட்டிருக்கிறது. ஆப்கானிஸ்தானில் போராட்டங்கள் தடை செய்யப்பட்டிருக்கும்போது தலிபான்களின் அனுமதியுடன் காபுலில் பாகிஸ்தான் தாக்குதல்களுக்கு எதிரான மக்கள் ஊர்வலம் அனுமதிக்கப்பட்டிருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்