“மொஸ்கோ” மூழ்கியபோது ஒரு வீரர் இறந்ததாகவும், 27 பேர் காணாமல் போனதாகவும் ரஷ்யா தெரிவித்திருக்கிறது.
முதல் தடவையாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சு கடற்படையின் மிகப்பெரிய போர்க்கப்பலான “மொஸ்கோ” நீரில் மூழ்கியபோது ஒரு பகுதி மாலுமிகள் இறந்துவிட்டதாக அறிவித்திருக்கிறது. சுமார் ஒரு வாரத்துக்கு முன்னர் ரஷ்ய இராணுவத்தின் கௌரவச் சின்னமான அக்கப்பல் தமது தாக்குதலால் வெடித்து கருங்கடலில் மூழ்கியதாக உக்ரேன் பெருமிதத்துடன் அறிவித்திருந்தது. ரஷ்யாவோ அந்தப் போர்க்கப்பலில் ஏற்பட்ட விபத்தொன்றால் அதிலிருந்த ஏவுகணைக்குண்டுகள் போன்ற வெடிக்கக்கூடிய ஆயுதங்கள் தீப்பிடித்ததாலேயே அக்கப்பல் மூழ்கியதாகச் சாதித்து வருகிறது.
வெள்ளியன்று மாலை ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட செய்தியின்படி இறந்தவர் ஒரு மாலுமி, காணாமல் போனவர்கள் 27. மற்றைய 396 பேரும் பாதுகாப்பாக அப்பகுதியில் நின்ற மேலுமொரு கப்பலுக்கு மாற்றப்பட்டார்கள்.
மூழ்கிய போர்க்கப்பலில் போரில் ஈடுபடும் மாலுமிகளைத் தவிர போர்ப்பயிற்சி பெறுபவர்களும் இருந்தார்கள். அக்கப்பலில் இருந்த தமது உறவினர்கள் பற்றித் தெரிந்துகொள்ள ரஷ்யர்கள் பலர் இதுவரை முயற்சித்தும் எவ்வித பதில்களும் கிடைக்கவில்லை. அப்படியான குடும்பத்தினர் பலர் சமூகவலைத்தளங்களில் சூடான கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
பெப்ரவரி 24 ம் திகதியன்று உக்ரேன் மீது ரஷ்யா ஆரம்பித்த ஆக்கிரமிப்பில் இதுவரையிலான மிகப்பெரிய இழப்பாகப் போர்க்கப்பல் “மொஸ்கோ” மூழ்கியமை கணிக்கப்படுகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்