நெருங்கிவரும் சவூதி – துருக்கிய உறவின் அடையாளமாக ஜனாதிபதி எர்டகான் சவூதிக்கு விஜயம்.
நீண்ட கால பிளவுக்குப் பின்னர் துருக்கிய ஜனாதிபதி எர்டகான் சவூதி அரேபியாவுக்கு முதல் தடவையாக விஜயம் செய்கிறார். அங்கே அவர் பட்டத்து இளவரசன் முஹம்மது பின் சல்மானையும் அரசன் சல்மான் பின் அப்துல் அஸீஸையும் இன்று வியாழக்கிழமை சந்திக்கவிருக்கிறார்.
துருக்கியில் இருக்கும் சவூதியத் தூதுவராலயத்திற்கு விஜயம் செய்த புலம்ப்யெர்ந்து வாழ்ந்த சவூதியப் பத்திரிகையாளர் கஷோஜ்ஜி கொலை செய்யப்பட்டது பற்றிய வழக்கைச் சமீபத்தில் துருக்கி சவூதி அரேபியாவிடமே கையளித்துவிட்டது. 2018 இல் நடந்த அக்கொலையின் பின்னர் மோசமாகிவிட்ட இரண்டு நாடுகளுக்கு இடையிலான உறவுகள் படிப்படியாக மென்மையாகி, அவ்வழக்கைச் சவூதியிடமே ஒப்படைத்ததுடன் ஒரு புதிய அத்தியாயத்தைத் திறந்திருக்கின்றன எனலாம்.
“இரண்டு நாடுகளுக்கும் இடையேயான சகல விதமான உறவுகளும் இந்த விஜயத்தின் போது மீளாராய்வு செய்து புதுப்பிக்கப்படும். சர்வதேச, பிராந்திய ரீதியிலான விடயங்களில் எப்படியான நிலைப்பாடுகளை எடுப்பது என்பது பற்றியும் இரண்டு நாடுகளுக்கிடையே கலந்தாலோசிக்கப்படும்,” என்று இந்த விடயம் பற்றி துருக்கிய வெளிவிவகார அறிக்கை குறிப்பிட்டிருக்கிறது.
மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்ட வசந்தகாலப் புரட்சி எனப்படும் அரசுகளுக்கு எதிரான மக்கள் எழுச்சியின் பின்னணியிலிருந்த அமைப்பான இஸ்லாமிய சகோதரத்துவத்துக்கு துருக்கி கொடுத்த ஆதரவால் துருக்கிக்கும் மற்றைய மத்திய கிழக்கு நாடுகளுக்கும் இடையே மனக்கசப்புக்கள் ஏற்பட்டிருந்தன. அவைகளால் அப்பிராந்திய அரசியலில் அந்த நாடுகளும் துருக்கியும் முரணான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தன.
அமெரிக்காவில் ஜோ பைடன் அரசு பதவியேற்றதும் டொனால்ட் டிரம்ப் காலத்தின் போது பெற்ற முன்னுரிமையைப் பெறாத வளைகுடா நாடுகள் அதே போன்று நீண்ட காலமாக அமெரிக்காவால் முடக்கப்பட்டிருக்கும் துருக்கியுடன் நெருங்கி அரசியல் செய்ய விரும்புகின்றன. அதன் விளைவாகவே அவ்விரு நாடுகளும் சமீப மாதங்களில் ஒன்றையொன்று நெருங்க ஆரம்பித்திருக்கின்றன.
சாள்ஸ் ஜெ. போமன்