கிழக்கு ஆபிரிக்க நாடுகளில் 20 மில்லியன் பேர் பட்டினியால் இறக்கும் அபாயம்.
கிழக்கு ஆபிரிக்கப் பிராந்தியத்தில் ஏற்பட்டிருக்கும் கடுமையான வரட்சியால் சுமார் 20 மில்லியன் பேர் உணவின்றி இறந்துபோகும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. கடந்த தசாப்தங்களை விடக் கணிசமாகக் குறைந்திருக்கும் மழைவீழ்ச்சியும், வரண்ட காலநிலைநீண்ட காலமாக நிலவுவதும் சேர்ந்து அப்பகுதியிலிருக்கும் நாடுகளை வெவ்வேறு வழிகளில் பாதித்திருக்கின்றன.
மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கும் நாடாகக் கென்யா சுட்டிக் காட்டப்படுகிறது. அந்த நாட்டின் பாலைவனப் பிரதேசம் அகன்று சுற்றியிருக்கும் பகுதிகளையும் வரட்சியாக்கிக்கொண்டிருக்கிறது. அப்பகுதி மக்களின் முக்கிய வாழ்வாதாரமாக இருக்கும் விவசாயம், விலங்குகள் வளர்ப்பு ஆகியவை கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றன.
வரட்சியால் மெலிந்துபோன மிருகங்கள் இறந்துபோவது அதிகமாகியிருக்கிறது. இன்னொரு விளைவாக நீர்வளம் குறைந்து அதற்கும் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. நாட்டின் வடக்கிலிருக்கும் மார்சபிட் பிராந்தியம் அதி மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. நீரில்லாத அப்பிரதேசத்துக்கு வேண்டிய நீரை மிகத் தூரத்திலிருக்கும் இடங்களிலிருந்தே கொண்டுவரவேண்டியிருக்கிறது. அதன் விலை அதிகமென்பதால் விவசாயம், விலங்கு வளர்ப்பு இரண்டுமே கேள்விக்குறியாகியிருக்கின்றன. அங்கு மட்டுமே கால் மில்லியன் மக்கள் பசி பட்டினியால் இறந்துவிடலாம் என்று அஞ்சப்படுகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்