ஹனான் அல் – அஷ்ராவி பலஸ்தீன அதிகாரத்தின் நிர்வாக சபையிலிருந்து விலகிக்கொண்டதாக அறிவித்தார்.
நீண்டகால பலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவரும் தற்போதைய பலஸ்தீன உயரதிகாரத்தின் நிர்வாக சபையின் முக்கிய புள்ளியுமான டாக்டர் ஹனான் அஷ்ராவி தான் நிர்வாக சபைத் தலைவர் முஹம்மது அப்பாஸிடம் விலகல் கடிதத்தைச் சமர்ப்பித்து விட்டதாகத் தெரிவித்திருக்கிறார். அவரது விலகலை முஹம்மது அப்பாஸ் இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை என்று குறிப்பிடப்படுகிறது
பலஸ்தீனக் கிறீஸ்தவரான 74 வயது அஷ்ராவி பலஸ்தீன நிர்வாக சபையில் 2009 முதல் இடம்பெற்றிருக்கும் முக்கியமான பெண் தலைவராகும். 1991 களிலிருந்தே பலஸ்தீன விடுதலை இயக்கத்தின் உத்தியோகபூர்வமான வெளியுலகத் தொடர்பாளராகவும், இஸ்ராயேலுடனான பேச்சுவார்த்தைகளில் பங்கெடுத்து வருபவராகவும் இருந்து வருகிறார்.
இஸ்ராயேல் தான் கைப்பற்றிய பலஸ்தீன நிலப்பரப்பில் குடியிருப்புகளைக் கட்டிக்கொண்டிருப்பதை எதிர்த்து மே மாதத்தில் அவர்களுடனான பேச்சுவார்த்தைகளிலிருந்து விலகிய பலஸ்தீன நிர்வாக அதிகாரம் சமீப வாரங்களில் மீண்டும் பேச்சுவார்த்தைகளுக்கு ஒப்புக்கொண்டமையால் அஷ்ராவில் கடும் கோபம் கொண்டிருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது. அத்துடன் சமீப காலங்களில் பலஸ்தீன நிர்வாக அதிகாரத்தால் எடுக்கப்படும் முடிவுகளில் அதன் அங்கத்தவர்கள் பலரும் ஒதுக்கப்பட்டு வருவதாக அவர் உணருவதாகவும் அவரை நெருங்கியவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
அஷ்ராவி ஒக்டோபர் மாதமளவில் கொரோனாத் தொற்றுக்கு உள்ளானதாலும், வயதாகிவிட்டதாலும் பலவீனமாக இருப்பதால் தனது பொறுப்புகளிலிருந்து விலகிக்கொள்ள விரும்புகிறார் என்று ஒரு சாரார் குறிப்பிட்டு வருகிறார்கள். பலஸ்தீன உயரதிகாரத்திலிருப்பவர்கள் பெரும்பாலும் மூத்த தலைமுறையினரே என்றும் மாறிவரும் சர்வதேச நிலைக்கேற்ப முக்கிய பதவிகளிலிருக்க இள வயதினரும், பெண்களும் அறிமுகப்படுத்தப்படவேண்டும் என்றும் தான் விரும்புவதாக அஷ்ராவி சில நிருபர்களிடம் தெரிவித்திருக்கிறார்.
சாள்ஸ் ஜெ. போமன்