இஸ்ராயேலோடு உறவு ஏற்படுத்திக்கொள்ளும் நான்காவது நாடாக மொறொக்கோ.
ஆபிரகாம் ஒப்பந்தம் என்றழைக்கப்படும் இஸ்ராயேலுடன் அரபு நாடுகளைப் பிணைக்கும் உறவு ஆரம்பிக்கப்பட்ட கடந்த மாதங்களில் அதில் இணைந்து இஸ்ராயேலுடன் கொண்டுள்ள பேதங்களை ஒதுக்கி வைக்கப்போவதாக அறிவிக்கிறது மொறொக்கோ.
அந்த ஒப்பந்தத்தில் மொறொக்கோவுக்கு டிரம்ப் தனது பங்குக்குக் கொடுப்பது மொறொக்கோவின் அதிகாரத்துக்குக் கீழ் தான் மேற்கு சகாரா பிரதேசம் என்ற ஒப்புதலாகும். மேற்கு சகாராவில் வாழும் சஹ்ராவி அராபர்கள் அப்பிரதேசத்தில் தங்களுடையது என்று கால் நூற்றாண்டுக்கும் அதிகமாகப் போராடி வருகிறார்கள்.அவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வருகிறது பக்கத்திலிருக்கும் அல்ஜீரியா.
“இன்னுமொரு சரித்திர நிகழ்ச்சி நடந்திருக்கிறது. எங்கள் நண்பர்களான இஸ்ராயேலுடன் முழு அரசியல் தொடர்புகளை உண்டாக்கிக்கொள்ள மொறொக்கோவின் அரசர் சம்மதித்திருக்கிறார். மத்திய கிழக்கில் அமைதியை ஏற்படுத்துவதில் மேலுமொரு வெற்றியை அடைந்திருக்கிறோம்,” என்று டிரம்ப் டுவீட்டியிருக்கிறார்.
அரபு நாடுகள் ஈரானுக்கு எதிராகத் தங்களை ஒன்றுபடுத்திக்கொண்டு ஒரே அணியில் இணைவதில் ஆர்வமாக இருக்கிறார்கள். பதிலாக அரசியல், வர்த்தக, தொழில் நுட்ப, உளவு உதவிகளை இஸ்ராயேலுடனும் அமெரிக்காவுடனும் சேர்ந்து பெற்றுக்கொள்வதே இந்த நகர்வின் நோக்கமென்று குறிப்பிடப்படுகிறது.
மத்திய கிழக்கில் உறவுகளை இணைப்பதில் டிரம்ப்பின் சார்பில் வெள்ளை மாளிகையின் குழுவின் முக்கியத்தவர்களாக டிரம்ப்பின் மருமகன் ஜராட் குஷ்னரும், ஏவி பெர்க்கோவிட்ஸும் இருக்கிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்