ஆகக்குறைந்தது நான்கு கேரளா அமைச்சர்கள் ஸ்வப்னா சுரேஷ் தங்கக் கடத்தல் விவகாரத்தில் மாட்டியிருக்கிறார்கள்.
எமிரேட்ஸ் தூதுவராலயத்தில் பணியாளராக இருந்த ஸ்வப்னா சுரேஷ், பி.எஸ் சரீத் ஆகியோர் கேரள அரசின் உயர்மட்ட அரசியல்வாதிகள், அதிகாரிகளின் உதவியுடன் தங்கம் கடத்தி வந்து பிடிபட்டபின் அவர்கள் வெளியிட்ட விபரங்கள் கேரள அரசை அதிரவைத்துக்கொண்டிருக்கின்றன. இரண்டு நாட்களுக்கு முன்னர் ஸ்வப்னா தன்னை முழு உண்மைகளையும் வெளியிடவேண்டாமென்று உயர் மட்டத்திலிருந்து கொலை மிரட்டல்கள் வருவதாகவும், பாதுகாப்புக் கைதியாக இருக்கும் தனக்கு மட்டுமின்றி தனது குடும்பத்தினருக்கும் பிரத்தியேக பாதுகாப்பு வேண்டுமென்று கோரியிருந்தார்.
இந்திய அரசின் ராஜதந்திர விவகாரங்களுக்கான தபால் வழியாக மாதம் சுமார் 30 கிலோவுக்குக் குறையாத தங்கத்தை ஒரு வருடத்துக்கும் அதிகமாக இந்தக் குழுவினர் கடத்தி வந்திருப்பது தெரியவந்தது. கைதுசெய்யப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் மற்றும் அவளது கூட்டாளிகளை விசாரித்ததில் அவர்களுடைய தொடர்புகள் கேரள முதலமைச்சரின் அலுவலகம் வரை எட்டியிருந்தது வெளிச்சமாகியது. கைது செய்யப்பட்ட பலரில் முதலமைச்சர் பின்யாரி விஜயனின் காரியதரிசியும் ஒருவராகும்.
தொடர்ந்து வெளியாகிவரும் விடயங்களின்படி இவ்விவகாரத்தில் நான்கு அமைச்சர்களாவது சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்பது தெரியவந்திருப்பதால் கேரளாவிலிருந்து முக்கிய அரசியல் தலைகள் டெல்லிக்குப் போயிருப்பதாகத் தெரிகிறது. ஸ்வப்னா சுரேஷின் பெயர் மும்தாஸ் இஸ்மாயில் என்றும் அவர் கத்தாரில் முஸ்லீமாக மாறியவர் என்றும் குறிப்பிடப்படுகிறது.
சாள்ஸ் ஜெ.போமன்