தீவிரவாதிகளுக்கு உதவும் நாடுகள் பட்டியலிலிருந்து சூடான் நீக்கப்பட்டது.
இவ்வருடம் ஒக்டோபர் மாதத்தில் அமெரிக்காவுடன் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தப்படி தீவிரவாதிகளுக்கு நிதிகளைக் கொடுத்து ஊக்குவிட்டும் நாடுகள் பட்டியலிலிருந்து சூடான் அகற்றப்பட்டதாக அறிவிக்கப்படுகிறது. அவ்வொப்பந்தப்படி கென்யா, தன்சானியா நாடுகளில் அமெரிக்க தூதுவராலயத்தில் நடாத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களில் பாதிக்கப்பட்ட அமெரிக்கர்களுக்கு நஷ்ட ஈடாக சூடான் 335 மில்லியன் டொலர்களை வழங்கவேண்டியிருந்தது.
அல்- கைதா அமைப்புக்கு அடைக்கலம் கொடுத்து வந்ததாக 1993 ம் ஆண்டிலிருந்து அந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்ட சூடான் 1998 இல் குறிப்பிட்ட இரண்டு அமெரிக்கத் தூதுவரலயங்களில் குண்டுவைத்துத் தாக்கியிருந்தது. நஷ்ட ஈடு வழங்குவது தவிர சூடான் இஸ்ரேலுடன் நல்லெண்ண ஒப்பந்தமொன்றையும் ஏற்படுத்திக்கொள்ளவேண்டுமென்று டிரம்ப் அரசு குறிப்பிட்டிருந்தது. சூடான் அதையும் ஏற்றுக் கொண்டு இஸ்ராயேலுடன் நட்பு நாடாக மாறியிருக்கிறது.
நீண்ட காலமாக சூடானை ஆண்டுவந்த சர்வாதிகாரி ஒமர் பஷீர் மக்கள் எழுச்சியினால் பதவியிலிருந்து தூக்கியெறிப்பட்ட காலத்திலிருந்தே அமெரிக்காவுடன் நட்பில் நெருங்கியிருக்கிறது. தற்போது தீவிரவாதிகளுக்கு உதவும் நாடு என்ற பட்டியலிலிருந்து நீக்கப்பட்டிருப்பதால் சூடானுக்குச் சர்வதேச அளவில் மற்றைய நாடுகளுடனும், வர்த்த அமைப்புக்களுடனும் ஒப்பந்தம் செய்ய இலகுவாகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்