“இந்தியா எங்கள் நாட்டின் மீது இராணுவத் தாக்குதலுக்குத் திட்டமிடுகிறது.” – பாகிஸ்தான்
தங்கள் நாட்டின் பகுதிகளில் இராணுவத் தாக்குதல் நடத்த இந்தியா திட்டமிடுவது தமது உளவுப் படைகளால் அறியப்பட்டிருக்கிறது என்று குற்றஞ்சாட்டியிருக்கிறார் அபுதாபியில் வைத்துக் பாகிஸ்தானிய வெளிவிவகார அமைச்சர் ஷா முஹம்மது குரெய்ஷி.
“எங்கள் நாட்டுக்குள் அவர்கள் நடத்தத் திட்டமிட்டிருக்கும் தாக்குதலுக்கான “பச்சை விளக்கைத்” தமது ஆதரவாளர்களான சர்வதேச முக்கியத்துவம் நிறைந்த நாடுகளிடம் பெற்றுக்கொள்வதில் இந்தியா இறங்கியிருக்கிறது. எங்கள் பலத்தை அவர்கள் குறைத்து மதிப்பிடுகிறார்கள். பெப்ரவரி 2019 இல் நாம் அவர்களுடைய தாக்குதலுக்குப் பதிலடி கொடுத்தது போலவே அவர்களை விட ஒரு படி அதிகமாகவே திருப்பியடிப்போம்,” என்று அவர் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.
தமது நாடுகள் சுதந்திரமடைந்த காலமுதல் மூன்று போர்களில் ஈடுபட்ட இந்த நாடுகள் சமீப வருடங்களில் ஒருத்தரையொருத்தர் “எங்களுக்கெதிராகத் தீவிரவாதத்தைத் தூண்டிவருகிறார்கள்,” என்று சர்வதேச அரங்கில் குற்றஞ்சாட்டிக்கொண்டேயிருப்பதுடன் சிறு சிறு மோதல்களிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.
தங்களிடம் மிகவும் திறமையான வேவுப்படை இருப்பதாகச் சொல்லும் பாகிஸ்தான் அவர்கள் மூலம் இந்தியா பாகிஸ்தானுக்குள் மூக்கை நுழைத்து ஈடுபடும் தீவிரவாத நடவடிக்கைகளை மோப்பம் பிடித்து ஆதாரங்களுடன் சர்வதேச வல்லரசுகளிடம் கடந்த மாதம் சமர்ப்பித்திருப்பதாகக் குறிப்பிடுகிறது. “சமாதான நிலைமை என்பது கூட்டுறவு முயற்சி, இந்தியா அதில் பிறழுமானால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல. அப்படியான முடிவுகளை இந்தியா எடுக்காமல் பார்த்துக்கொள்வது சர்வதேசத்தின் பொறுப்பு,” என்றும் பாகிஸ்தான் சுட்டிக் காட்டுகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்