ரஷ்யாவில் தட்டுப்பாடு மருந்துக்கல்ல, தடுப்பு மருந்தைப் போட்டுக்கொள்பவர்களுக்குத் தட்டுப்பாடு.
ரஷ்ய மக்களிடையே கொவிட் 19 தடுப்பு மருந்துக்கான எதிர்ப்பு கணிசமாக வளர்ந்திருக்கிறது. ஜனவரியின் நடுப்பகுதியில், புத்தின் நாட்டு மக்கள் எவர் விரும்பினாலும் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என்று அறிவித்துப் பல இடங்களில் அதற்கான ஏற்பாடுகளைச் செய்திருப்பினும் மக்கள் நெருக்கிக்கொண்டு வரிசையில் காத்திருக்கவில்லை.
விஞ்ஞானச் சஞ்சிகையொன்றின் ஆராய்ச்சிப்படி கொவிட் 19 க்கு எதிராக மிகப் பலமான பாதுகாப்புக் கொடுப்பதாகக் குறிப்பிடப்பட்ட ஸ்புட்நிக் V க்கு உலகின் பல நாடுகளிலும் மவுசு ஏற்பட்டிருக்கிறது. தயாரிப்பின் ஆரம்பக் காலத்தில் தேவையான அளவு நாட்டு மக்களுக்குக் கிடைக்காத அது தற்போது ரஷ்யாவில் தேவைக்குக் கிடைக்கிறது. ஏற்படுத்தப்பட்டிருக்கும் தடுப்பூசி மையங்களில் அதன் 50 % தான் பயன்படுத்தப்படுகின்றது.
இதுவரை ரஷ்யாவின் 3.2 மில்லியன் மக்களே தடுப்பூசிகளில் ஒன்றையாவது பெற்றிருக்கிறார்கள். இது நாட்டின் 3 % மக்களாகும். ஆகஸ்ட் மாதத்தின் இறுதியில் நாட்டு மக்களின் பெரும்பான்மையானோர் தடுப்பு மருந்தைப் போட்டுக்கொண்டிருக்கவேண்டும் என்பது அரசின் எதிர்பார்ப்பு. அதை அடைவதற்கு மக்கள் தற்போது செய்வதை விட பல மடங்குகள் அதிகமாகத் தடுப்பு மருந்துகளைப் பெற்றுக்கொள்ளவேண்டும்.
ரஷ்ய அரசின் புள்ளிவிபரங்கள் சேகரிக்கும் திணைக்களத்தினால் சமீபத்தில் நடாத்தப்பட்ட கணிப்பீட்டின்படி மூன்றிலொரு பங்கு ரஷ்யர்களே தடுப்பூசி பெற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறார்கள். 62 % ரஷ்யர்கள் எந்த ஒரு தடுப்பு மருந்தையும் பெற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. அம்மருந்து பலமான பக்கவிளைவுகளைத் தருமென்ற அச்சமும், அதுபற்றி அதிக ஆராய்ச்சிகள் நடக்கவேண்டுமென்ற எதிர்பார்ப்பும் பலரிடையே நிலவுகிறது. எனவே, மக்களிடையே அதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முடுக்கிவிட்டிருக்கிறார்கள் ரஷ்ய அதிகாரிகள்.
சாள்ஸ் ஜெ. போமன்
