தென் அமெரிக்கப் பயணிகள் தனிமைப்பட இணங்காவிடில் ஆயிரத்து 500 ஈரோ அபராதம்!
பிறேசில், தென் ஆபிரிக்கா போன்ற நாடுகளில் பரவிவருகின்ற வைரஸ் திரிபுகளின் தொற்றைத் தடுக்கும் நடவடிக்கைகளை பிரான்ஸ் இறுக்குகிறது.
பிறேசில், ஆஜென்ரீனா, சிலி, தென் ஆபிரிக்கா போன்ற நாடுகளில் இருந்து வரும் பயணிகள் பத்து தினங்கள் கட்டாய சுயதனிமைப்படுத்தலுக்கு உள்ளாவார்கள். அதனை ஏற்க மறுத்து மீறுகின்ற எவரும் ஆயிரத்து 500 ஈரோக்களை அபராதமாக செலுத்தவேண்டி இருக்கும். அத்தகையவர்களைத் தனிமைப்படுத்தி வைக்கும் இடங்களைப் பொலீஸாரும் ஜொந்தாமினரும் கண்காணிப்பார்கள்.இரண்டாவது முறை கட்டுப்பாட்டை மீறினால் அபராதம் மூவாயிரம் ஈரோக்கள் ஆகும்.
அரசாங்கப் பேச்சாளர் கப்ரியேல் அட்டால் இத்தகவல்களை வெளியிட்டிருக்கிறார்.
பிரான்ஸில் கோடை விடுமுறை காலப் பகுதியில் பிறேசில் வைரஸ் திரிபு தீவிரமாகப் பரவக்கூடிய வாய்ப்புண்டு என்று
தொற்று நோயியலாளர்கள் எச்சரித்துள்ளனர்.
மாற்றமடைந்த திரிபுகள் தடுப்பூசிகளை எதிர்க்கும் வலுக் கொண்டவையா என்பது இன்னமும் பூரணமாக உறுதிப்படுத்
தப்படாத நிலையில் புதிய திரிபுகள் இரண்டினது தன்மைகளைக் கொண்ட ஒரே திரிபாக இரட்டைத் திரிபு வைரஸ் தோன்றி இந்தியாவைப் பெரும் நெருக்கடிக்குள் தள்ளியிருக்கின்றது.
லண்டனில் இந்திய வைரஸ் தொற்றி யோர் சிலர் கண்டுபிடிக்கப்பட்டதை அடு த்து இந்தியாவை சிவப்புப் பட்டியல் நாடாக அறிவித்திருக்கிறது பிரிட்டன். அங்கு இந்தியப் பயணிகள் வருகை தருவது தடுக்கப்பட்டிருக்கிறது.
ஐரோப்பிய நாடுகள் பலவும் பொது முடக்கக் கட்டுப்பாடுகளில் இருந்து மக்களை விடுவிக்கத் திட்டமிட்டு வருகின்ற சமயத்தில் பிறேசில், இந்தியா போன்ற நாடுகளின் திரிபுகள் அதற்குச் சவாலாக மாறக் கூடிய நிலைமை எழுந்துள்ளது.
——————————————————————-
குமாரதாஸன். பாரிஸ்.