அராபியக் கடலில் அடையாளம் காட்டாத கப்பலிலிருந்து பெருமளவு ஆயுதங்களை அமெரிக்கக் கடற்படைக்கப்பல் கைப்பற்றியது.
பஹ்ரேனிலிருக்கும் அமெரிக்க இராணுவத் தளத்திலிருந்து செயற்படும் கடற்படையின் ஆயுதம் தாங்கிய USS Monterey என்ற கப்பல் தனது வழக்கமான சுற்றின்போது எந்த நாடு என்று அடையாளப்படுத்தாத கப்பலொன்றைத் தடுத்து நிறுத்திச் சோதனையிட்டது. அக்கப்பலில் பெருமளவில் ரஷ்ய, சீன ஆயுதங்கள் காணப்படவே அவைகளை அமெரிக்கா தன்வசப்படுத்தியிருக்கிறது.
கைப்பற்ற ஆயுதங்களிடையே, விமானங்களைத் தாக்கும், தூரத்து இடங்களைத் தேடித் தாக்கும் ஏவுகணைகள், நவீன ரக இயந்திரத் துப்பாக்கிகள் போன்றவைகள் இருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது. குறிப்பிட்ட கப்பல் எங்கிருந்து வந்ததென்ற விபரங்கள் வெளியிடப்படவில்லை. அந்த ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டபின் கைப்பற்றப்பட்ட கப்பலின் நிலையை ஆராய்ந்து அதிலிருந்த மாலுமிகளை விசாரணை செய்து வருவதாக அமெரிக்கா அறிவிக்கிறது.
குறிப்பிட்ட அராபியக் கடற் பிராந்தியத்தில் யேமனில் நடந்துவரும் போரில் பாவிக்கப்படுவதற்கான ஆயுதங்கள் கடத்தப்படுவதாகப் பல தடவைகளும் அமெரிக்காவும் அதன் ஆதரவு நாடான சவூதி அரேபியாவும் குற்றஞ்சாட்டி வந்திருக்கின்றன. அந்த ஆயுதங்களை ஈரானிலிருந்து யேமனுக்குக் கடத்திவருவதாகவும் அவைகள் சவூதி அரேபியாவுக்கு எதிராகப் பல தடவைகள் பாவிக்கப்படுவதாகவும் சவூதி அரேபியா குறிப்பிட்டு வந்திருக்கிறது.
பல முனைப்போராக நடந்துவரும் யேமன் போரின் விளைவுகளிலொன்றாக அந்த நாட்டின் சிறு துறைமுகங்கள் பல எவ்விதப் பாதுகாப்புமின்றி இருந்து வருகின்றன. அப்படியான துறைமுகங்களையே ஈரானுடைய ஆதரவு பெற்ற ஹூத்தி அமைப்பின் போராளிகள் பாவித்து வருகிறார்கள். யேமனில் சர்வதேசத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசை விட அதிகமான பிராந்தியங்களைக் கைகளுக்குள் வைத்திருக்கும் ஹூத்தி அமைப்பினரைச் சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்குக் கொண்டுவர அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் சமீபத்தில் கடும் பிரயத்தனம் செய்து வருகின்றன.
அந்தக் குறியை அடைவதானால் ஹூத்தியினருக்கு ஆயுதங்கள் வரும் வழிகளை அடைத்துவிடுவது அவசியம். எனவேதான் அமெரிக்காவின் கடற்படை அராபியக் கடல், இந்து சமுத்திரத்தின் சில பகுதிகளில் தனது கண்காணிப்பை அதிகரித்திருக்கிறது. பிடிக்கப்பட்ட ஆயுதங்கள் எங்கே போகின்றன, எவருக்காக போன்ற விபரங்களை அறிய மாலுமிகள் விசாரிக்கப்பட்டு வருகிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்