எலோன் மஸ்க் டுவிட்டரை வாங்கினால், மீண்டும் அங்கே டொனால்ட் டிரம்ப் வருவாரா?
உலகின் மிகப்பெரும் பணக்காரரான எலோன் மஸ்க் மின்கலத்தால் இயங்கும் வாகனங்களைத் தயாரிக்கும் டெஸ்லா நிறுவன உரிமையாளர். சமீபத்தில் அவர் டுவிட்டர் நிறுவனத்தின் பங்குகளில் 9 % ஐ வாங்கிவிட்டார் என்பது வெளியாகியது. அப்பங்குகளின் உரிமையாளர் என்பதன் மூலம் அவரே அந்த நிறுவனத்தில் தனிமையாக மிக அதிக பங்குகளின் சொந்தக்காரர். அதையடுத்து டுவிட்டர் அவரை நிறுவனத்தின் நிர்வாக அமைப்புக் குழுவில் ஒருவராகும்படி கேட்டுக்கொண்டதை மறுத்து முழு நிறுவனத்தையுமே சுமார் 41 பில்லியன் டொலருக்கு வாங்கிக்கொள்ள விரும்புவதாக அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
“இதுவே என்னைப் பொறுத்தவரை அந்தப் பங்குகளுக்கு என்னால் கொடுக்கக்கூடிய அதிகபட்ச விலை. இதை நிறுவனம் மறுக்கும் பட்சத்தில் நான் அதில் எனது பங்கீடு பற்றி மறு அலசல் செய்துகொள்ளவேண்டிவரும்,” என்று நிறுவனத்தின் நிர்வாகிகளுக்கு அவர் எழுதியிருக்கிறார்.
எலோன் மஸ்க் டுவிட்டரை வாங்கிக்கொள்ளலாம் என்ற எதிர்பார்ப்பில் பங்குகளின் விலை எகிறியிருக்கிறது. அதையடுத்து ஒரு பங்கின் விலை 50 டொலர் வரை உயர்ந்திருக்கிறது. ஆயினும் 2021 இல் பங்கு\73 டொலர் வரை உயர்ந்திருந்தது.
டுவிட்டரில் 81 மில்லியன் பேர் எலோன் மஸ்க்கைத் தொடர்கிறார்கள். அந்தச் சமூக வலைத்தளத்தில் அவருடைய பதிவுகள் சர்வதேச பங்குச்சந்தைகளில் அவ்வப்போது மாற்றங்களைக் கொண்டுவந்திருக்கிறது. அவைகள் சர்வதேச அரசியலிலும் விவாதங்களை உண்டாக்கியிருக்கின்றன. தனி மனிதக் கருத்துரிமை பற்றிய டுவிட்டரின் நிலைப்பாட்டைக் கடுமையாக விமர்சித்து வரும் மஸ்க் தன்னை ஒரு முழுமையான ஜனநாயகவாதியாகக் கருதுபவர். அமெரிக்காவின் பொருளாதார வர்த்தக நிறுவனங்களைக் கண்காணிக்கும் அதிகாரத்திடமும் பல தடவைகள் டுவிட்டரில் எலோன் மஸ்க் தனது டுவிட்டர் கருத்துக்களுக்காக பிரச்சினைகளுக்கு உள்ளாகியிருக்கிறார்.
டுவிட்டரில் தற்போது இருப்பதை விட மிகக் குறைவான கட்டுப்பாடுகளே இருக்கவேண்டும், தற்போது அளவுக்கதிகமானோர் தமது கருத்து வெளியீடுகளுக்காகத் தடை செய்யப்படுகிறார்கள் என்று கருதுபவர் மஸ்க். அவரது அந்த நிலைப்பாட்டால் அவர் அந்த நிறுவனத்தின் முழு உரிமையாளராவது பற்றிய சர்ச்சை அமெரிக்காவில் பொங்கியெழுந்திருக்கிறது.
நடந்துகொண்டிருக்கும் ரிபப்ளிகன் கட்சி மாநாடு ஒன்றில் டிரம்ப் ஆதரவாளர்களிடையே மஸ்க் டுவிட்டரை முழுமையாக வாங்குவது பற்றி உற்சாகம் ஏற்பட்டு ஆதரவு கொடுக்கப்பட்டிருக்கிறது. மஸ்க் தனது திட்டப்படி டுவிட்டரை வாங்குவாரானால் அத்தளத்தில் மீண்டும் டொனால்ட் டிரம்ப் கணக்குத் திறக்கப்படலாம் என்று பலர் கருதுகிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்