ஜோர்ஜியாவின் எதிர்க்கட்சித் தலைவர் நிகா மேலியாவை அவரது அலுவலகத்தினுள் நுழைந்து கைது செய்தது பொலீஸ்.

2019 ம் ஆண்டில் நாட்டில் அரசுக்கு எதிரான வன்முறைப் போராட்டங்களை ஒழுங்குசெய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறார் நாட்டின் மிகப் பெரிய எதிர்க்கட்சியின் தலைவர் நிகா மேலியா. அவர் அதற்காகத் தண்டிக்கப்பட்டால் அவருக்கு 9 வருடம் வரை சிறைத்தண்டனை கிடைக்கலாம். அதற்காக அவரை முன்னெச்சரிக்கைக் காவலில் வைக்க அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். 

நிகா மேலியாவைக் கைது செய்ய உள்துறை கடந்த வாரம் உத்தரவு கொடுக்கப்பட்டதை அறிந்து நாட்டின் பிரதமர் தனது பதவியிலிருந்து கடந்த வியாழனன்று இறங்கினார். நிகா மேலியாவைக் கைது செய்வதன் மூலம் நாட்டின் அரசியல் நிலை மேலும் மோசமாகும் என்று எதிர்பார்ப்பதாலேயே அவர் பதவி விலகுவதாகத் தெரிவித்தார்.

ஜோர்ஜியாவின் அரசியலில் ரஷ்யாவின் மூக்கு நுழைப்பே 2019 இல் எதிர்க்கட்சித் தலைவர் மக்களைப் போராட்டத்துக்குத் தூண்டக் காரணமாகும். அச்சமயம் பாராளுமன்றத்தில் சபாநாயகரின் இடத்தைப் பறித்து ஒரு ரஷ்ய பாராளுமன்ற உறுப்பினர் ரஷ்ய மொழியில் உரை நிகழ்த்தினார். அதனால் ஜோர்ஜிய மக்கள் கொதிப்படைந்தனர். எதிர்ப்பைக் காட்டப் பாராளுமன்றத்துக்குள் போராட்டக்காரர்கள் நுழைந்தார்கள்.

நிகா மேலியா கைதுசெய்யப்படலாம் என்ற அச்சம் நிலவியதால் அவரைக் கட்சி அலுவலகத்தில் தங்கவைத்து அவரது ஆதரவாளர்கள் பாதுகாத்து வந்தனர். வழக்கு நடக்கும் வரை நிகா மேலியா காலில் காவல் வளையம் அணிந்திருக்கிறார். அத்துடன் அவர் தண்டப் பணமும் கட்டவேண்டும். அவர் காவல் வளையத்தை அகற்றிவிட்டு அத்தண்டத்தைக் கட்டத் தவறியதாலேயே அவரைக் கைதுசெய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக உள்துறை அமைச்சு தெரிவிக்கிறது.

கடந்த வருடம் நடந்த தேர்தல்களில் தில்லுமுல்லுகள் செய்யப்பட்டதாகவும் எதிர்க்கட்சி குற்றஞ்சாட்டி வருகிறது. United National Movement என்ற நிகா மேலியாவின் கட்சி மிக்கேல் சாக்கஸ்வெல்லியால் ஆரம்பிக்கப்பட்டது. இது ஒரு ஐரோப்பிய ஒன்றிய ஆதரவுக் கட்சியாகும். ஜோர்ஜிய அரசியலில் ஆழமாக வேரூன்றியிருக்கும் ரஷ்ய ஈடுபாட்டினால் அரசியல் நிலையற்றிருக்கிறது. கட்சியை ஸ்தாபித்த மிக்கேல் சாக்கஸ்வெல்லி உக்ரேனில் அரசியல் தஞ்சம் பெற்று வாழ்கிறார். 

நிகா மேலியா கைது செய்யப்பட்டதை மேற்கு நாடுகள் கடுமையாகக் கண்டித்திருக்கின்றன. அக்கட்சியின் ஆதரவாளர்கள் நாட்டில் பேரணிகளை அறிவித்திருக்கிறார்கள்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *