விரைவில் பாவனைக்கு வரவிருக்கும் கொவிட் 19 தடுப்புமருந்தினால் மோசமான பக்கவிளைவுகள் உண்டாகினால் அரசு நஷ்ட ஈடு கொடுக்கும் – சுவீடன்.
“சகல குடிமக்களும் கொவிட் 19 க்கான தடுப்பு மருந்தைப் போட்டுக்கொள்ளவேண்டும் என்பதே எங்கள் எண்ணம். அதனால் விளைவுகளுக்குப் பயந்து எவரும் அதைப் போட்டுக்கொள்ளாமலிருக்கும் நிலைமை உண்டாகலாகாது. மருந்து நிறுவனங்களின் காப்புறுதி, அரச ஆரோக்கிய காப்புறுதி ஆகியவைகள் எட்டாமலிருப்பவர்களுக்கு அரசின் பிரத்தியேக காப்புறுதியொன்று உண்டாக்கப்பட்டு அதன் மூலம் நஷ்ட ஈடுகள் கொடுக்கப்படும்,” என்று நாட்டின் மக்கள் ஆரோக்கிய அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.
ஐந்து கொவிட் 19 மருந்து நிறுவனங்களுடன் சுவீடன் அரசு ஒப்பந்தங்கள் செய்துள்ளதாகவும் அவைகளிலிரண்டு நிறுவனங்கள் இதுவரை சுவீடனில் செயற்படாததால் அவர்களின் தடுப்பு மருந்துகளுக்கான காப்புறுதி இல்லையென்றும் ஆனால் அதற்காக எவரும் கவலைப்படவேண்டாமென்றும் அமைச்சர் உறுதிகூறியிருக்கிறார்.
2009 – 2010 பன்றிக்காய்ச்சல் வந்தபோது சுவீடனில் எல்லோருக்கும் அதற்கான தடுப்பூசி பெற்றுக்கொள்ளும் வாய்ப்புக் கொடுக்கப்பட்டது. அதனால் நூற்றுச்சொச்ச இளவயதினர் பாதிக்கப்பட்டார்கள். அதற்காக அரசு பின்னர் நஷ்ட ஈடு கொடுக்கவேண்டியிருந்தது. அந்த ஞாபகம் தற்போதும் சுவீடன் மக்களிடையே இருப்பதால் தடுப்பு மருந்துக்கான நம்பிக்கை ஊட்டப்படுவது, தடுப்பு மருந்தைப் பாவனைக்குக் கொண்டுவருவதற்கு ஈடான முக்கிய கடமை என்று அரசு கருதுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
சாள்ஸ் ஜெ.போமன்