மர்வான் அர்-பர்கூத்தி பாலஸ்தீனத் தலைவருக்கெதிராகப் போட்டியிட வேட்பாளர்களைப் பதிவுசெய்துவிட்டார்.
இஸ்ராயேலின் சிறையிலிருந்து கொண்டு தனது மனைவி மூலமாக வரவிருக்கும் தேர்தலில் பாலஸ்தீனப் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் பெயர்களடங்கிய பட்டியலைத் தாக்கல் செய்திருக்கிறார் பாலஸ்தீனர்களின் மண்டெலா என்று தனது ஆதரவாளர்களால் போற்றப்படும் மர்வான் அல் – பர்கூத்தி. மே 22 ம் திகதி நடக்கவிருக்கும் அத்தேர்தல்களில் அவரது பட்டியலில் இருப்பவர்கள் அவரது பழைய கட்சியான அல் -பத்தா கட்சியின் வேட்பாளர்களை எதிர்த்துப் போட்டியிடுவார்கள்.
அல் பத்தாவைத் தவிர அதன் எதிரணியான ஹமாஸ் இயக்கம் தனது வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலைத் தாக்கல் செய்திருக்கிறது. எனவே கடந்த 15 வருடங்களுக்கு முன்னரிருந்த தேர்தல் போல அல் பத்தாவின் மஹ்மூத் அப்பாஸுக்கு எதிராக இரண்டு எதிரணிகள். அவைகளால் பாலஸ்தீனர்களின் வாக்குகள் பிளவுபடும்.
தனது பதவிக்காலத்தில் படிப்படியாக ஒரு சர்வாதிகாரியாக மாறிவிட்டவர் ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ். பாலஸ்தீனம் என்ற நாட்டை அமைக்கவேண்டுமென்று போராடுபவர்கள் மஹ்மூத் அப்பாஸும் அல் – பர்கூத்தியும். அப்பாஸும், அவரது பாலஸ்தீன நிர்வாகமும் பாலஸ்தீனர்களிடையே வெறுப்பையே சம்பாதித்திருக்கின்றன.
மேற்றுப் பள்ளாத்தாக்கு, காஸா பிராந்தியம், பாலஸ்தீனப் பகுதிகளுக்கு நடக்கவிருக்கும் தேர்தல்கள் அமைதியாக நடாத்தப்பட்டு அப்பாஸும், ஹமாஸ் இயக்கமும் ஒன்றுடனொன்று தொடர்ந்தும் குடுமிப்பிடிச் சண்டையில் ஈடுபடாமலிருந்தால் தான் பாலஸ்தீனப் பேச்சுவார்த்தைகளுக்கு உதவுவோம் என்பது சர்வதேசத்தின் கோரிக்கை. அதை நிறைவேற்றவே அப்பாஸ் ஹமாஸுடன் சுமுகமாகி வரவிருக்கும் பாராளுமன்ற, ஜனாதிபதித் தேர்தல்களை அறிவித்தார்.
ஏற்கனவே காஸாவில் மஹ்மூத் அப்பாஸுக்கு ஆதரவில்லை. பாலஸ்தீனத்திலும் பெரும் வெறுப்பைச் சம்பாதித்திருக்கிறார். இந்த நிலையில் எந்தப் பகுதியிலும் வெல்லும் வாய்ப்பில்லாது போனால் தேர்தல்கள் நடாத்தப்படுமா, அல்லது அவர் ஏதாவது சாட்டுச்சொல்லிப் பதவியில் தொடர்ந்தும் ஒட்டிக்கொள்வாரா என்ற கேள்வி மீண்டும் பலமாக எழுந்திருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்