அமெரிக்காவின் பாராளுமன்றக் கட்டட எல்லையில் பொலீசார் மீது மோதிய வாகனத்திலிருந்தவன் சுட்டுக் கொல்லப்பட்டான்.
ஜனவரி 06 ம் திகதி அமெரிக்கப் பாராளுமன்றத்தினுள் (கப்பிடோல்) நுழைந்து டிரம்ப் – ஆதரவாளர்கள் செய்த தில்லுமுல்லுகளின் பின்னர் அந்தக் கட்டடத்தைச் சுற்றித் தொடர்ந்தும் பாதுகாப்பு வளையம் அமைந்திருக்கிறது. கட்டடத்திலிருந்து சுமார் 100 மீற்றர் தூரத்தில் எல்லையையடுத்துப் பாதுகாப்பிலிருந்த பொலீசாரை நோக்கி வெள்ளியன்று ஒருவன் தனது வாகனத்தைச் செலுத்திக் காயப்படுத்தினான்.
கீழே இறங்கிய அவன் கைகளில் கத்தியுடன் அங்கிருந்த பொலீசார் மீது தாக்க ஆரம்பித்தபோது அவர்களால் சுடப்பட்டான். கைது செய்யப்பட்டு எடுத்துச் செல்லப்பட்ட அவன் மரணமடைந்ததாக அறிவிக்கப்படுகிறது. கார் மோதியதால் காயமடைந்து மருத்துவசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்ட பொலீசாரில் ஒருவரும் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
அமெரிக்காவை மீண்டும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள இச்சம்பவத்தில் இறந்த பொலீஸ் வீரருடைய குடும்பத்துக்கு ஜனாதிபதியும் மனைவியும் தமது இரங்கலைத் தெரிவித்திருக்கிறார்கள்.
காரால் பொலீசாரை மோதியவன் மனோநிலை பாதிக்கப்பட்டு இருந்ததாகவும் தான் ஆபத்திலிருப்பதாகக் கற்பனை செய்து வாழ்ந்து வந்ததாகவும் அவனது குடும்பத்தினர் தெரிவிக்கிறார்கள். நோவா கிரீன் என்ற அவன் போதை மருந்துகளின் பிடிக்குள் அகப்பட்டுக் கற்பனையான உலகில் வாழ்ந்து வந்ததாக அவனது சகோதரர் மூலம் தெரியவருகிறது. அவனது சமூக வலைத்தளங்களில் அவன் உலக அழிவு, அந்தி கிறீஸ்து பற்றியும் “நேஷன் ஆப் இஸ்லாம்” என்ற ஒரு கறுப்பின இஸ்லாமிய மறுமலர்ச்சி இயக்கத்துக்கு ஆதரவான பதிவுகளை எழுதிவந்திருப்பதாகத் தெரிகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்