தென் கொரியக் கைப்பேசி நிறுவனமான LG தனது கைப்பேசித் தயாரிப்புகளை முற்றாக நிறுத்துவதாக அறிவிக்கிறது.
2013 இல் சாம்ஸுங், அப்பிள் கெட்டிக்காரத் தொலைபேசிகளுக்கு அடுத்ததாக விற்பனையில் மூன்றாவது இடத்தை உலகளவில் பெற்றிருந்த நிறுவனம் இனிமேல் தாம் அத்தொலைபேசிகளைத் தயாரிக்கப்போவதில்லை என்று அறிவித்திருக்கின்றன. கடந்த வருடம் சாம்ஸுங் 256 மில்லியன் கைப்பேசிகளை விற்றபோது LG ஆல் வெறும் 23 மில்லியன்களையே விற்கமுடிந்தது.
விற்பனையிலும், பிரபலத்திலும் 2013 இல் உச்சத்திலிருந்த LG தான் பரந்த கோணக் காமராக்களைத் தனது கைப்பேசிகளில் முதலில் அறிமுகப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. அதையடுத்த வருடங்களில் அவர்களுடைய தயாரிப்புக்களில் ஏற்பட்ட குழறுபடிகளாலும், விற்பனை விளம்பரப் பகுதியின் குறைபாட்டாலும் இதுவரை 4 பில்லியன் எவ்ரோக்கள் நஷ்டமடைந்திருக்கிறது. விற்பனையோ உலகச் சந்தையில் வெறும் 2 % தான்.
தனது தயாரிப்புக்களை ஒரு வியட்நாம் கைப்பேசி நிறுவனத்துக்கு விற்க முயன்ற LG அந்த முயற்சியில் தோல்வியடைந்துவிட்டதால் வேறு வழியின்றி நிறுத்த முடிவுசெய்தது.
மின்கல வாகனங்களுக்கான உதிரிப்பாகங்களையும், வீட்டில் பாவிப்பதற்குரிய தொலைத்தொடர்பு உபகரணங்களையும் மட்டும் தொடர்ந்து தயாரிப்பதாக LG முடிவுசெய்திருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்