புளோரிடாவில் சுரங்க அணைக்கட்டொன்று உடைந்து நாசம் விளைவிக்கும் அபாயம்.
அமெரிக்காவில் புளோரிடாவிலிருக்கும் டம்பா பே பகுதியில் (Manatee County) அவசரகால நிலைமை ஏற்பட்டிருப்பதாக அறிவித்துப் பல நூற்றுக்கணக்கான வீடுகளிலிருந்தவர்கள் வேறிடங்களுக்கு மாற்றப்பட்டிருக்கிறார்கள். ஆளுனர் ரொன் சந்தீஸ் தமக்கு உதவி வேண்டிப் பக்கத்து நகரங்களின் மீட்டுப் படையினரிடம் உதவி கேட்டிருக்கிறார்.
சுமார் 1.2 பில்லியன் அசுத்த நீர் கொண்ட சுரங்க அணையொன்றில் (old Piney Point phosphate plant) வெடிப்பு ஏற்பட்டிருக்கிறது. அந்த நீர் சமீப நாட்களில் வேகமாகக் கடலுக்குள் மாற்றப்பட்டு வருகிறது. ஆனாலும், அணைக்கட்டு உடையும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கப்பட்டிருப்பதாலேயே ஆபத்துக்கால நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த அணை உடையுமானால் ஆறு மீற்றர் உயரமான அசுத்த நீராலான அலையொன்று அப்பகுதியின் மீது வீசிச் செல்லும் என்று கணிக்கப்படுகிறது.
மிகவும் அசுத்தமான, அபாயமான அந்த அணைக்குள் இருக்கும் நீரைக் கடலுக்குள் விடுவதும் அபாயமானதே என்று சுற்றுப்புற சூழல் விற்பன்னர்கள் தெரிவிக்கின்றனர். அந்த நீரில் மோசமான கிருமிகளும், இரசாயணங்களும் கலந்திருப்பதால் அப்பகுதிக் கடல் நீரை அது அசுத்தப்படுத்தி, நீருக்குக் கீழ் மட்டத்தை அழித்து, உயிரினங்களைக் கொல்லிவிடும் என்று எச்சரிக்கப்பட்டாலும் தற்சமயம் அணை உடைந்து ஏற்படும் தீங்கைத் தடுக்க வேறு வழியில்லை என்று குறிப்பிடப்படுகிறது.
மார்ச் மாதத்திலேயே கவனிக்கப்பட்ட அணைக்கட்டிலிருந்த வெடிப்புக்களால் அப்பகுதியிலிருந்து 300 வீடுகளில் வாழ்பவர்கள் வேறிடங்களுக்கு மாற்றப்பட ஆரம்பிக்கப்பட்டார்கள். அங்கிருந்த சிறைச்சாலையொன்றிலிருந்து சுமார் 300 கைதிகளும் வேறிடத்துக்கு மாற்றப்பட்டிருக்கிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்