நோர்வேயின் தனிமைப்படுத்தல் சட்டத்தை ஏமாற்ற எல்லையூடாகப் பனிச்சறுக்கலால் முயன்றவரைக் காலநிலை ஏமாற்றிவிட்டது.
சுவீடனில் வேலை செய்யும் நோர்வீஜியக் குடிமகனொருவருக்குச் சில பத்திரங்கள் நோர்வேயில் தேவையாக இருந்தது. வழக்கமான வீதிகளைப் பயன்படுத்தினால் நோர்வேக்குள் நுழைந்தவுடன் அவர் சில நாட்கள் தன்னைத் தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டும் என்பது சட்டம். அந்த நாட்களைத் தவிர்க்கத் திட்டமிட்டார் அந்த 50 வயதுக்காரர்.
தனக்குக் கொரோனாத் தொற்று இல்லையென்று நிரூபித்துப் பத்து நாட்கள் தனிமைப்படுத்தலில் இருக்க விரும்பாத அவர் நோர்வேக்கும் சுவீடனுக்குமிடையே இருக்கும் மலைப்பகுதியால் பனிச்சறுக்குச் செய்து நோர்வேக்குப் போய்விட்டு அதே வழியால் திரும்பத் திட்டமிட்டார். உயரமான மலைப் பகுதிகளையும், குளங்களையும் கொண்ட அந்த வழியின் தூரம் 40 கி.மீ மட்டுமே.
சுமார் 25 கி.மீ தூரத்தைத் தாண்டிய அவர் காலநிலை மாற்றம் வழியில் ஏற்படவே மோசமான பனிக்குள் மாட்டிக்கொண்டார். ஈரமான அப்பனிக்குள் அவரால் தொடரமுடியவில்லை. அந்த ஊரிலிருந்த மீட்புக் குழுவால் அவர் மீட்கப்பட்டார்.
மீட்கப்பட்ட நோர்வீஜியரை அவர்கள் பொலீசாரிடம் ஒப்படைத்தனர். தங்களுக்கு மீட்கப்பட்டவர் நன்றி கூடச் சொல்லவில்லையென்று குறைப்பட்டார் அவரை மீட்டவர்.
நோர்வேயில் அவர் அபராதம் செலுத்தி, கட்டாயத் தனிமைப்படுத்தலில் பத்து நாட்களைச் செலவழிக்கவேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகியிருக்கிறார்.
சாள்ஸ் ஜெ. போமன்