ஆயுதம் தாங்கிய ஒரு குழுவினர் நைஜீரியாவின் சிறையொன்றைத் தாக்கி சுமார் 1,800 பேரை விடுவித்தார்கள்.
நைஜீரியாவின் தென்கிழக்குப் பிராந்தியத்தில் பலமாகிவரும் ஆயுதபாணிக் குழுக்கள் பொலீஸ், இராணுவம் போன்றவற்றைத் தாக்கி அவர்களிடமிருந்து ஆயுதங்களைக் கொள்ளையடிப்பது வழக்கமாகி வருகிறது. இரண்டு வாரங்களுக்கு முன்னர் இதே பிராந்தியத்தில் தாக்குதல் நடாத்தியதுபோலவே ஒவெர்ரி நகரில் திட்டமிட்டுப் பல அரசாங்க அலுவலகங்களைத் தாக்கியிருக்கிறார்கள் ஆயுதபாணிக் குழுக்கள்.
இக்குழுக்களின் நோக்கங்கள் என்னவாக இருக்குமென்று அதிக விபரங்களில்லை. அனேகமாக அரசாங்கத்தின் நடவடிக்கைகளில் நம்பிக்கையிழந்து கொள்ளை, கடத்தல் போன்றவற்றில் ஈடுபடுகிறவர்களே இவர்கள் என்று அரசு விபரிக்கிறது.
சமீபகாலத்தில் நடந்துவருவது போன்று திட்டமிட்டே ஒவெர்ரி நகரின் சிறையும் தாக்கப்பட்டிருக்கிறது. சிறைத் தாக்கலுக்கு உதவ முடியாத வகையில் அப்பகுதியிலிருக்கும் இராணுவ, பொலீஸ் நிலையங்களையும் பலமாக ஆயுதங்கள் தாங்கியவர்கள் தாக்கியிருக்கிறார்கள். அவர்களது திட்டம்போலவே சுமார் 1,800 சிறைக்கைதிகள் தப்பியோட உதவியிருக்கிறார்கள்.
தப்பியோடிய சிறைக்கைதிகளை மீண்டும் கைதுசெய்ய வலைவீசியிருப்பதாக நைஜீரிய அரசு தெரிவித்திருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்