சுவிஷேசம் பரப்பும் அமெரிக்க கிறீஸ்தவர்களிடையே தடுப்பு மருந்தெடுப்பதில் வெறுப்பு தொடர்கிறது.
கொவிட் 19 தடுப்பு மருந்துகளை எடுப்பதிலிருக்கும் ஆர்வம் பற்றி மார்ச் மாதத்தில் அமெரிக்காவில் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பீட்டின்படி பரப்பப்படும் கிறீஸ்தவ [evangelical] புரொட்டஸ்டாண்ட் அமெரிக்கர்களில் 40 % பேர் தாம் பெரும்பாலும் தடுப்பூசிகளெதையும் எடுக்கப்போவதில்லையென்று கூறியிருக்கிறார்கள்.
மொத்த அமெரிக்கர்களில் 25 % தாம் தடுப்பூசி போட்டுக்கொள்ளப்போவதில்லையென்று கூறுகிறார்கள். அப்படியிருக்கையில் சுமார் 45,000 திருச்சபைகளைக் கொண்ட பரப்பும் கிறீஸ்தவ அமைப்பினரிடையே தடுப்பூசி போட இருக்கும் மறுப்பு அத்திருச்சபையின் உயர்மட்ட நிர்வாகிகளிடையே சஞ்சலத்தை உண்டாக்கியிருக்கிறது.
தென் மாநிலங்களின் பப்டிஸ்ட் திருச்சபையின் தலைவர் J.D கிரீயர் சமீபத்தில் தான் தடுப்பூசி போட்டுக்கொண்டதைப் படமெடுத்துத் தனது சமூகவலைத்தளத்தில் பதிந்திருந்தார். அது அத்திருச்சபையின் ஒரு சாராரிடையே ஆதரவையும் இன்னொரு பக்கத்தினரிடையே அதிருப்தியையும் ஏற்படுத்தியதை அதுபற்றிய விமர்சனங்களில் காணமுடிந்தது.
பரப்பும் கிறீஸ்தவர்களில் வெள்ளை அமெரிக்கர்கள் நாட்டின் 20 % விகித குடிமக்களாக இருக்கும்போது அவர்களிடையே காணப்படும் தடுப்பூசி எதிர்ப்பு அமெரிக்காவில் கொவிட் 19 ஐ ஒழித்துக்கட்டுவதற்கு கடினமான சூழலை ஏற்படுத்துமென்று அத்திருச்சபைகளின் தலைவர்களே உணர்கிறார்கள்.
அத்திருச்சபைகளின் பெரும்பாலான உயர்மட்டத் தலைவர்கள் தடுப்பூசி எடுத்துக்கொள்ளும்படி தங்களுடையே அங்கத்தவர்களைப் பல வழிகளிலும் உற்சாகப்படுத்தி வருகிறார்கள். இன்னொரு, பகுதியினர் அதுபற்றிய தங்கள் கருத்தைப் பொதுவாக வெளிப்படுத்தத் தயங்கவும் செய்கிறார்கள்.
“இது ஒரு ஆன்மீகம் சம்பந்தப்பட்ட விடயமல்ல, எனவே இதில் அங்கத்தவர்கள் சொந்த முடிவை எடுக்கட்டும்,” என்று குறிப்பிடும் குருவானவர்கள் இருக்கிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்