82 வயதான தனது பாட்டியைப் பராமரிக்கும் இளம் பெண் மொடர்னாவின் தடுப்பு மருந்தைப் பெறும் முதல் பிரிட்டிஷ்காரர்.
வயது முதிந்த தனது பாட்டியைக் கட்டணமின்றிப் பேணிவரும் ஏல் டெய்லர் தான் தொடர்ந்தும் தனது பாட்டியை இனிமேல் கவனித்துக்கொள்ள முடியும் என்ற சந்தோசத்துடன் இன்று தடுப்பு மருந்தைப் பெற்றுக்கொண்டார். 24 வயதான இவர் தனக்குத் தடுப்பூசி கிடைக்குமென்று நேற்றுத்தான் தெரியவந்ததாகக் குறிப்பிடுகிறார்.
ஐக்கிய ராச்சியத்தின் வேல்ஸ் பகுதியில் மொடர்னாவின் தடுப்பு மருந்துகள் கொடுக்கப்படுவதைப் பெருமையுடன் குறிப்பிடுகிறார் வேல்ஸின் மக்கள் ஆரோக்கிய அமைச்சர் வோகன் கெத்திங், “இது கொவிட் 19 க்கு எதிரான எங்கள் போராட்டத்தின் இன்னொரு மைல் கல்.
அமெரிக்காவின் மசாசூசெட்ஸில் மொடர்னா தனது ஆராய்ச்சியைச் செய்து வருகிறது. இத்தடுப்பு மருந்து மனிதர்கள் மீது ஆராய்ச்சி செய்யப்பட்டபோது 100 % விகித பலன் கொடுப்பதாகத் தெரியவருகிறது. பிரிட்டனில் லீட்ஸ் நகருக்கு வடக்கேயிருக்கும் நொர்வூட் தொழிற்சாலையில் இது பிரிட்டனுக்காகத் தயாரிக்கப்படுகிறது. சுமார் 17 மில்லியன் மொடர்னா தடுப்பு மருந்துகளை பிரிட்டன் வாங்கியிருப்பதாகத் தெரிகிறது.
லொன்ஸா என்ற நிறுவனத்துடன் கூட்டுச்சேர்ந்து உலகம் முழுவதும் தனது கொவிட் 19 தடுப்பு மருந்துகளைத் தயாரிக்கத் திட்டமிட்டிருக்கிறது மொடர்னா. ஐரோப்பாவில் ஏற்கனவே சுவிஸில் மேலுமொரு தொழிற்சாலையில் இது தயார்செய்யப்பட அனுமதிக்கப்பட்டிருக்கிறது.
ஐக்கிய ராச்சியத்தில் மட்டுமன்றி ஐரோப்பிய ஒன்றியத்திலும் கொவிட் 19 க்கு எதிராகப் பாவிக்கப்பட மொடர்னாவின் தடுப்பு மருந்து ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. ஐரோப்பிய ஒன்றியம் ஏற்கனவே மொடர்னாவுடன் ஏற்படுத்திக்கொண்ட கொள்வனவு ஒப்பந்தம் தவிர மேலும் 150 மில்லியன் தடுப்பு மருந்துகளை 2021 இலும் 150 மில்லியன்களை 2022 இலும் கொள்வனவு செய்வதாக ஒப்பந்தம் செய்திருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்