கொரோனாத்தொற்றுக்களின் மறுவிளைவுகள் சங்கிலியாகத் தொடர்கின்றன என்று அரசை எச்சரிக்கும் பிரேசில் மருத்துவர்கள்.
கொரோனாத் தொற்றுக்களின் ஆரம்ப காலம் முதல் நாட்டை முற்றாக முடக்குவதை மறுத்துவரும் பிரேசில் ஜனாதிபதியின் கருத்தை, நாட்டின் புதிய மக்கள் ஆரோக்கிய அமைச்சரும் ஆமோதிக்கிறார். நேற்றைய தினம் பிரேசில் தினசரி இறப்பு இலக்கமாக 4,000 ஐ தொட்டபோது மீண்டும் நாட்டின் மருத்துவர்கள் இரண்டு வாரமாவது நாட்டின் சகல துறைகளையும் முடக்கும்படி வேண்டுகிறார்கள்.
சௌ பவ்லொ போன்ற நகரங்களில் இறந்தவர்களை அடக்கம் செய்ய இடங்கள் முடிந்துவிட்டன. அங்கே வேலை செய்பவர்கள் தினசரி 12 மணிகள் நிறுத்தாமல் வேலை செய்கிறார்கள். தினசரி 4,195 பேர் கொரோனாத் தொற்றால் இறக்கும்போது, இன்னொரு பக்கம் 1,191,776 தொற்றுக்குள் உள்ளாகியிருகிறார்கள். பொல்சனாரோவின் அரசு தினசரி வரும் எண்ணிக்கைகளைச் சவரம் செய்து உண்மையான எண்ணிக்கையை மறைத்தே வருகிறது என்ற பல மருத்துவ சேவையிலுள்ளவர்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள்.
தொற்று நோய் விற்பன்னர்கள் பிரேசிலின் தற்போதைய நிலையை “உயிரியல் புகோஷிமா [Fukushima]” என்ற சொற்பதத்தால் வர்ணிக்கிறார்கள். அதாவது இறப்புகளும், புதிய தொற்றுக்களும் பெரும் எண்ணிக்கையில் நிறுத்த முடியாமல் சங்கிலியாக ஒன்றையொன்று தொடர்கின்றன. ஏதாவது ஒன்றைக் கட்டுப்படுத்த முடியுமானால் அது தொற்றுக்களின் வேகத்தையேயாகும். அதற்குத் தேவை அவகாசம். அதை நாடு முழுவதையும் பொது முடக்கத்துக்கு உள்ளாக்குவதால் தான் உண்டாக்க முடியும் என்பது அவர்களுடைய பரிந்துரை.
92 வெவ்வேறு திரிபடைந்த கொரோனாக் கிருமி ரகங்கள் பிரேசிலில் பரவி வருகின்றன. அமேஸான் பகுதிகளில் உருவாகியிருக்கும் அவைகளிலொன்று மற்றவைகள் அனைத்தையும் விட பாதிக்கப்பட்டவர்களின் உயிரைக் குடிக்கும் ரகமாகும். மருத்துவமனைகள் நிரம்பி வழியும் அதேசமயம் கடும் தொற்றுக்குள்ளானவர்கள் பலர் வீடுகள் பராமரிக்கப்பட்டு வருவதால் தொற்றுக்கள் மேலும் அதிகரிக்கின்றன.
சாள்ஸ் ஜெ.போமன்