ஐரோப்பிய நாடுகள் சில படிப்படியாகத் தமது கொரோனாக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி வருகின்றன.

தடுப்பு மருந்துகளைப் போடுவதில் ஐரோப்பிய நாடுகளில் முதலிடத்திலிருக்கும் பிரிட்டன் சில நாட்களுக்கு முன்னர் நாட்டின் ஒவ்வொரு துறையையும் படிப்படியாகத் திறக்கப்போவதாக அறிவித்திருந்தது. அதையடுத்து டிசம்பர் கடைசி வாரம் முதல் கடுமையான கட்டுப்பாடுகளை நிர்வகித்துவந்த டென்மார்க்கும் தனது கொரோனாக் கட்டுப்பாட்டுச் செயலியுடன் நாட்டின் சில வர்த்தகத் துறைகளைத் திறந்தது.  

https://vetrinadai.com/news/boris-uk-restri/

ஹங்கேரி, கிரீஸ் ஆகிய நாடுகளும் தமது நாட்டின் வர்த்தகத் துறைகளையும் சமூகங்களையும் படிப்படியாகத் திறக்கப்போவதாக அறிவித்திருக்கின்றன. இரண்டு நாடுகளிலுமே தற்போது கொரோனாத் தொற்றுக்கள் கடுமையாக இருப்பினும் தத்தம் நாடுகளில் தடுப்பூசி கொடுப்பதில் அவை கணிசமாக வெற்றியடைந்திருப்பதாகக் கருதுகின்றன.

நாட்டின் முக்கியமான வருமானப் பசுவான சுற்றுலாத் துறைக்கு அவசியமான பல தீவுகளை “கொரோனா அழிக்கப்பட்டவை,” என்று குறிப்பிட்டிருக்கும் கிரீஸ் அத்தீவுகளின் நிரந்தர குடிமக்களெல்லாருக்கும் தடுப்பூசிகளைக் கொடுத்துவிட்டது. இம்மாத மூன்றாம் வாரத்திலிருந்து குறிப்பிட்ட பிராந்தியச் சுற்றுலாப் பயணிகளுக்காகக் கதவுகளைத் திறக்கப்போகிறது கிரீஸ்.

ஹங்கேரி தனது நாட்டின் 25 % மக்களுக்கு ஒரு தடுப்பூசியையாவது கொடுத்திருக்கிறது. நாட்டின் வர்த்தகத் துறை வாங்கியிருக்கும் கடுமையான அடியைச் சமாளிக்க நாட்டின் தலைவர் விக்டர் ஒர்பான் அவ்வர்த்தகங்களை மீண்டும் இயங்க அனுமதிப்பதை மருத்துவ சேவையினர் கண்டிக்கின்றனர். விகிதாசாரப்படி கவனித்தால் சமீப நாட்களில் உலகில் பலர் கொரோனாவுக்குப் பலியாகும் நாடுகளில் ஹங்கேரி முதன்மையான ஒன்றாக இருந்து வருகிறது.  

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *