எகிப்தில், லுக்ஸரில் “தங்க நகரம்” என்றழைக்கப்படும் 3,000 ஆண்டுகள் பழைய குடியிருப்பைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
நீண்ட காலமாகப் பல அகழ்பொருளாராட்சியாளர்கள் குறிப்பிட்ட பகுதியில் ஏதன் என்ற ஒரு பழங்கால நகரம் இருப்பதாகத் தேடிக்கொண்டிருந்தார்கள். கடந்த வருடத்தில் எகிப்தைச் சேர்ந்த விற்பன்னரொருவரான ஸகி ஹவாஸ் என்பவரின் தலைமையிலான ஒரு குழுவினர் அந்த தங்க நகரத்தை மணல் பரப்பின் கீழே தோண்டிக் கண்டுபிடித்தார்கள்.
துத்தன்காமுன் என்ற பாரோவின் பாதுகாக்கப்பட்ட உடலை 1920 இல் கண்டுபிடித்தபின்னர் இதுவே எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்ட மிக முக்கிய சரித்திரகாலப் பொக்கிஷம் என்று குறிப்பிடப்படுகிறது. லுக்ஸரில் துத்தன்காமுனின் கோவிலொன்றைத் தேடிக்கொண்டிருந்த தொல்பொருள் ஆய்வாளர் குழுவொன்று திடீரென்று மணற்பரப்பின் கீழே முழுமையான சுவர்கள், நிலம், முழுமையாகப் பாதுகாக்கப்பட்ட அறைகள் மற்றும் ஆபரணங்கள், வேலை செய்யும் உபகரணங்களைக் கண்டுபிடித்தார்கள்.
அவைகளைத் தொடர்ந்து மணலைத் தோண்டிக்கொண்டே போனபோது குறிப்பிட்ட தங்க நகரத்தின் அமைப்பு தெளிவாக ஆரம்பித்தது என்று அவர்கள் விபரிக்கிறார்கள். ஏதன் என்ற இந்த நகரமே 3,000 வருடங்களுக்கு முந்தைய எகிப்தின் நிர்வாக மற்றும் தொழிற்சாலை மையமாகச் செயற்பட்டது என்று சரித்திர ஆதாரங்களை வைத்தே அந்த நகரம் பற்றிப் பலரும் பல வருடங்களாகத் தேடிவந்தார்கள்.
அமன்ஹோதெப் III என்ற எகிப்தை 40 வருடகாலம் ஆண்ட பாரோவின் காலத்து நகரமே இது என்று கருதுகிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். அச்சமயத்தில் எகிப்து மிகவும் வளமான நாடாக இருந்தது. அதையடுத்து ஆட்சிக்கு வந்த மகன் அமென்ஹோதெப் IV, எகிப்தில் பல மாறுதல்களைக் கொண்டுவந்தான்.
பல தெய்வங்களை வழிபாடு செய்யும் மரபு ஒழிக்கப்பட்டு ஒரே ஒரு கடவுள் சூரியக்கடவுள் மட்டுமே என்ற சட்டம் கொண்டுவரப்பட்டது. அதுவரை எகிப்தின் தலை நகராக இருந்துவந்த லுக்ஸரிலிருந்து நிர்வாகங்கள் அமர்னா என்ற இடத்துக்கு மாற்றப்பட்டது.
அத்தகைய மாற்றங்கள் கொண்டுவரப்படக் காரணமென்ன? பிற்காலத்தில் அகேனதன் என்ற பெயர் சூடிக்கொண்ட பாரோ அமென்ஹோதெப் IV எப்படிப்பட்ட ஆட்சியாளன்? போன்ற கேள்விகளுக்கு ஏதன் என்ற கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் தங்க நகரத்திலிருந்து விடைகளைக் காணலாமென்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்