32 வருடங்கள் அனுபவமிக்க கிரேக்க பத்திரிகையாளரை அவரது வீட்டு வாசலில் வைத்துச் சுட்டுக் கொலை.

ஜியோர்கோஸ் கரைவாஸ் என்ற 52 வயதான பத்திரிகையாளர் தனது வேலைத்தளத்திலிருந்து வீடு திரும்பும்போது அவரது வீட்டு வாசலில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டார். தலைநகரான ஏதனுக்கு வெளியே நடந்த இந்தக் கொலையை மோட்டார்சைக்கிளில் வந்த இரண்டு பேர் செய்ததாகக் குறிப்பிடப்படுகிறது. சம்பவம் நடந்த இடத்தில் சுட்டுத் தீர்க்கப்பட்ட பதினேழு துப்பாக்கிக் குண்டுகள் கண்டெடுக்கப்பட்டன என்று பொலீசார் தெரிவித்தனர். 

ஸ்டார் தொலைக்காட்சி என்ற நிறுவனத்தில் வேலை செய்யும் ஜியோர்கோஸ் கரைவாஸ் சொந்தமாக ஒரு புளொக் பக்கமும் வைத்திருக்கிறார். கிரீஸின் மிக முக்கியமான குற்றவியல் பத்திரிகையாளராகும். சமீப காலத்தில் கிரீஸில் பத்திரிகையாளர்கள், ஊடகங்கள் மீதான மிரட்டல்களும், தாக்குதல்களும் அதிகமாகியிருப்பதாக அரசியல்வாதிகள் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. 

2010 இல் சோக்கிரட்டீஸ் ஜியோலியாஸ் என்ற வானொலி ஊடகவியலாளர், அவரும், குற்றங்களைப் பற்றி ஆராய்ந்து எழுதுபவர் தனது வீட்டு வாசலில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது கொலையாளிகள் யாரென்பது இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. 

மிரட்டல்களுக்கும், தமது பத்திரிகைக் காரியாலயங்கள், வீடுகள் தாக்கப்படுவதையும் கண்டு பயந்து சமீப காலத்தில் பொலீஸ் பாதுகாப்புக் கேட்டு வருகிறார்கள். காரைவாஸோ பயந்து பாதுகாப்புக் கேட்கக்கூடிய மனோநிலையுள்ளவரல்ல என்கிறார்கள் அவரது நண்பர்கள்.  

கிரீஸின் பிரதமர், அரசியல் கட்சி முக்கியஸ்துவர்கள் முதல் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் வரை கரைவாஸின் கொலையைக் கேட்டுத் தமது கண்டனத்தைத் தெரிவித்திருக்கிறார்கள். கிரேக்க பிரதமர் தனது உள்துறை, பொலிஸ் அமைச்சரை வரவழைத்து கரைவாஸின் கொலைகாரர்களை உடனடியாகக் கண்டுபிடித்து நீதியின் முன்னர் நிறுத்துமாறு பணித்திருக்கிறார்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *