எழுத்தாளர்களோ காளான்களாக முளைக்கிறார்கள், வாசிப்பவர்களின் எண்ணிக்கையோ குறைந்துபோகிறது.
கொவிட் 19 இன் பக்கவிளைவுகளிலொன்றாக உலகெங்கும் பதிப்பாளர்களை நோக்கித் தமது படைப்புக்களை அனுப்பிவைப்பவர்கள் தொகை கணிசமாக அதிகரித்திருப்பதாகப் பல நாடுகளிலிருந்தும் வரும் செய்திகளிலிருந்து அறியமுடிகிறது. அதேசமயம் வாசிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்துவருவதையும் புள்ளிவிபரங்கள் தெரியப்படுத்துகின்றன.
பிரெஞ்சுப் பதிப்பாளர்களான கலிமார்ட்(Gallimard) “ஏற்பட்டிருக்கும் இந்த விதிவிலக்கான சந்தர்ப்பத்தில், தயவுசெய்து உங்கள் படைப்புக்களை அனுப்பிவைப்பதை நிறுத்துங்கள். உங்கள் நலனைக் கவனித்துக்கொள்ளுங்கள், நிறைய வாசியுங்கள்,” என்ற குறிப்பைத் தங்களிடம் படைப்புக்களை அனுப்பிவைக்கும் எழுத்தாளர்களுக்கு அனுப்பி வருகிறார்கள்.
கொரோனாத் தொற்றுக்கள் ஆரம்பிக்க முன்னிருந்த காலத்தில் தினசரி 30 படைப்புக்களைத் தாம் பெற்றதாகவும் அது இப்போது 50 ஆக அதிகரித்திருப்பதாகவும் கலிமார்ட் நிறுவனம் தெரிவிக்கிறது. இன்னொரு பிரெஞ்சுப் பதிப்பாளர்களான சியுயில் (Siuil) தாம் வருடாவருடம் சுமார் 3,500 படைப்புக்களை எதிர்கொள்வதாகவும் 2021 இல் ஏற்கனவே 1,200 படைப்புக்கள் வந்துவிட்டதாகவும் குறைப்பட்டுக்கொள்கிறார்கள்.
பல ஐரோப்பிய நாட்டவர்களைப் போலவே பிரெஞ்சுக்காரர்களும் புத்தகங்களை வாசித்து வருபவர்களே. 80 % பிரெஞ்சுக்காரர்கள் தாம் 2020 இல் ஒரு புத்தகத்தையாவது வாசித்திருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால், பொதுவில் வாசிக்கும் வழக்கம் முன்பைவிடக் குறைந்திருப்பதை சமீபத்தில் பிரான்ஸில் எடுக்கப்பட்ட கணிப்பீடொன்று காட்டுகிறது.
சுமார் 5 மில்லியம் பிரெஞ்சுக்காரர்கள் கொரோனாக்காலத்தில் – கடந்த வருடத்தில் எதையாவது எழுதத் தொடங்கியிருப்பதாகத் தெரிகிறது. பலர், தாம் முன்னர் ஆரம்பித்த படைப்புக்களைத் தூசு தட்டி எடுத்து எழுத்தைத் தொடர்கிறார்கள்.
பதிப்பு நிறுவனங்களோ தமது வெளியீடுகளைக் குறைத்துக்கொண்டிருப்பதால் பல பிரெஞ்சுக்காரர்கள் சொந்தமாகவே தமது படைப்புக்களை வெளியிட ஆரம்பித்திருக்கிறார்கள். அதற்கான உதவிகளைச் செய்யும் முகவர்கள் தம்மிடம் சொந்தப் பதிப்புக்கான சேவைபெறுபவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்திருப்பதாகக் குறிப்பிடுகிறார்கள். சுயபதிப்புக்கான உதவிகளைச் செய்யும் சில நிறுவனங்களின் சேவை கடந்த வருடத்தில் 40 விகிதமும், கடந்த மாதங்களில் 90 விகிதத்தாலும் அதிகரித்திருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்