43 மீற்றர் உயர “பாதுகாக்கும் கிறீஸ்து,” சிலையைக் கட்டிவருகிறது பிரேசில்.
பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோவிலிருக்கும் “மீட்பர் கிறீஸ்து”, சிலை ஏற்கனவே உலகப் பிரசித்தி பெற்றது. 38 மீற்றர் உயரமான அந்தச் சிலை 700 மீற்றர் உயரமான கொர்க்கவாடோ மலையுச்சியில் அமைக்கப்பட்டிருக்கிறது. அச்சிலையை விட உயரமான மேலுமொரு கிறீஸ்து சிலையைக் கட்டிவருகிறார்கள் பிரேசிலின் தெற்கில்.
தகுவாரி பள்ளத்தாக்கிலிருக்கும் என்கன்தாடோ நகரில் 2019 நடுப்பகுதியில் கட்டப்பட ஆரம்பிக்கப்பட்டிருக்கும் கிறீஸ்து, பாதுகாவலர் சிலை தனது அடித்தளத்துடன் சேர்ந்து 43 மீற்றர் உயரமாக இருக்கும். இரண்டு கரங்களை விரித்து நிற்கும் கிறீஸ்துவின் இந்தச் சிலையின் இரண்டு கைகளுக்குமிடையேயான இடைவெளி 36 மீற்றராகும். இவ்வாரத்தில் அவ்விரண்டு கைகளும், கிறீஸ்துவின் தலையும் ஸ்தாபிக்கப்பட்டன.
இச்சிலையினுள்ளிருக்கும் 36 மீற்றர் உயர இயங்கும் ஏணி மூலம் மேலே சென்று அந்தப் பள்ளத்தாக்கைப் பார்த்து ரசிக்கலாம். சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கவும், விசுவாசிகளை ஈர்க்கவுமாக நிறுவப்படும் இச்சிலை இவ்வருட இறுதியில் திறந்துவைக்கப்படுமென்று அறிவிக்கப்படுகிறது.
நகரிலிருக்கும் நிறுவனங்களும், விசுவாசிகளுமாகச் செலவுசெய்து உண்டாக்கப்படும் இந்தச் சிலையைக் கட்ட ஆரம்பித்துவைத்த நகரபிதாவான 81 வயது அட்ரொவால்டோ கொன்ஸெட்டி கடந்த மாதம் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டார்.
சாள்ஸ் ஜெ. போமன்