மேற்கிந்தியத் தீவுகளிலொன்றான செயிண்ட் வின்சண்ட் தீவில் La Soufriere எரிமலையின் தாக்குதலால் குடிநீருக்குத் தட்டுப்பாடு.

சுமார் ஒரு வாரத்துக்கு முன்னர் ஆரம்பித்த எரிமலைச் சீறல் செயிண்ட் வின்சண்ட் தீவைப் பல வழிகளிலும் கடுமையாகப் பாதித்து வருகிறது. ஐந்து நாட்களாக மீண்டும், மீண்டும் வெடித்துச் சீறிவரும்  La Soufriere எரிமலை 1979 ம் ஆண்டுக்குப் பின்னர் இப்போதுதான் உயிர்த்தெழுந்திருக்கின்றது. 

எரிமலையையடுத்து வாழும் மக்களை எச்சரித்தும்கூட எரிமலை சுமார் ஐந்து நாட்களுக்கு முன்னர் விழித்தெழுந்து சீறி வானத்தை மறைக்கும் எரிமலைக் குழம்பு, புகைகளை வீசியபோது பலர் அங்கிருந்து அகலவில்லை. அதன் பின்பு ஒவ்வொரு நாளும் தொடர்ந்து எரிமலை வெடித்துச் சீறிவருவதால் தீவெங்கும் கந்தக மணமும் கரி, சாம்பல், கற்கள் போன்றவை இறைந்து கிடப்பதாகக் கூறப்படுகிறது. வானமே முற்றாக மறைக்கப்பட்டிருப்பதால் விமானத் தொடர்புகள் நிறுத்தப்படிருக்கின்றன.

தீவிலிருக்கும் விவசாய நிலங்களின் விளைச்சல்களையெல்லாம் எரிமலைச் சாம்பல் மூடியிருக்கிறது. குடி நீர் நிலைகளையும் எரிமலை பாதித்திருப்பதால் குடி நீருக்கும் கடும் தட்டுப்பாடு ஏற்படலாமென்று நாட்டின் நிர்வாகிகள் எச்சரித்திருக்கிறார்கள். 

எரிமலை தொடர்ந்து வாரங்கள், அல்லது மாதங்களுக்குச் சீறிக்கொண்டிருக்குமென்றும் மோசமான தாக்குதல்கள் இனித்தான் வருமென்றும் எரிமலை ஆராய்வாளர்கள் எச்சரிக்கிறார்கள்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *