டிரம்ப் தனது கடைசி வேலை நாளில் செய்த ஆயுத விற்பனைக்குப் பச்சைக் கொடி காட்ட ஜோ பைடன் அரசு தயாராகிறது.
கடந்த நவம்பர் மாதத்தில் அன்றைய அமெரிக்க ஜனாதிபதி இஸ்ராயேலுடன் அரபு நாடுகளைக் கைகுலுக்கவைக்கும் ஆபிரகாம் ஒப்பந்தத்தைக் கைச்சாத்திட்டபோது, பக்க ஒப்பந்தமாக எமிரேட்ஸ் அரசுக்குச் சுமார் 23 பில்லியன் டொலர்கள் பெறுமதியான ஆயுதங்களை விற்பனை செய்வதாக உறுதிகொடுக்கப்பட்டிருந்தது. அதற்கான கையெழுத்தைப் போட்டுவிட்டே டொனால்ட் டிரம்ப் பதவியிலிருந்து இறங்கினார்.
https://vetrinadai.com/news/f-35-deal-biden/
அந்த ஆயுதங்களில் அமெரிக்காவின் அதி நவீன ஆயுதங்களுடன் F-35 Lighting II போர்விமானங்களும் அடங்கியிருந்தன. தற்போதைய நிலையில் உலகின் படு மோசமான அழிவுகளை உண்டாக்கும் யேமன் மீதான போரில் எமிரேட்ஸும் பங்குபற்றுவதால் அவர்களுக்குக் குறிப்பிட்ட ஆயுதங்களை விற்பனை செய்வதற்கு ஜோ பைடன் கட்சியில் சிலர் ஆட்சேபனை தெரிவித்தனர். அதையடுத்து அமெரிக்க அரசு குறிப்பிட்ட ஆயுத விற்பனையை மீண்டும் பரிசீலனை செய்யவேண்டுமென்று குறிப்பிட்டுத் தடை செய்திருந்தது.
செவ்வாயன்று அமெரிக்க அரசின் புதிய அறிக்கையின்படி, குறிப்பிட்ட ஆயுதங்கள், தளபாடங்களை எமிரேட்ஸுக்கு விற்பதற்கு இருந்த ஆட்சேபனைகள் பற்றி ஆராயப்பட்டு அவர்களுடன் பேச்சுவார்த்தைகள் நடாத்தியபின் அவ்விற்பனையை அங்கீகரிக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.
பேச்சுவார்த்தைகள் தொடர்ந்துகொண்டிருப்பதாகவும் எமிரேட்ஸ் தனது பிராந்திய அமைதிக்காக ஒத்துழைக்க உறுதி கொடுத்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அவைகள் வெற்றிபெறும் பட்சத்தில் குறிப்பிட்ட ஆயுதங்கள் 2025 இல் எமிரேட்ஸிடம் கையளிக்கப்படுமென்று தெரிவிக்கப்படுகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்