சீனாவுடன் எப்படியான உறவுகளை வைத்துக்கொள்வோம் என்பது பற்றி நாமே தீர்மானிப்போமென்கிறார் நியூசிலாந்து வெளிவிவகார அமைச்சர்.
“ஐந்து கண்கள்” என்ற பெயரில் ஒன்றிணைந்து செயற்படும் அமெரிக்கா, ஆஸ்ரேலியா, பிரிட்டன், கனடா, நியூசிலாந்து ஆகிய பசுபிக் நாடுகளின் அமைப்பு நியூசிலாந்தின் சீனாவுடனான உறவு எப்படியிருக்கவேண்டுமென்று நிர்ணயிப்பதை நாம் விரும்பவில்லை,” என்று குறிப்பிடுகிறார் நியூசிலாந்தின் வெளிவிவகார அமைச்சர் நனயா மஹூத்தா.
“ஐந்து கண்கள்” ஒத்துழைப்பின் காரணம் சீனா அந்தப் பிராந்தியத்தில் சண்டியன் மனப்பான்மையில் நடந்துவருவதுக்கு முட்டுக்கட்டை போடுவதாகும். ஹொங்கொங்கில் ஜனநாயக உரிமைகள் பறிக்கப்பட்டமை, பலர் கைதுசெய்யப்பட்டமை போன்றவையை எதிர்த்து நியூசிலாந்தும் சக நட்பு நாடுகளுடன் சேர்ந்து அறிக்கை விட்டிருந்தது. ஆனால், எல்லா விடயங்களுக்கும் மற்ற நாலு நாடுகளுடன் சேர்ந்து சீனா மீது சேறு வீசுவதைத் தாம் விரும்பவில்லை என்று இப்போது நியூசிலாந்து தெரிவிக்கிறது.
“எங்கள் பிராந்தியத்திலிருக்கும் சீனாவுடன் பல விடயங்களில் நாங்களே பேசித் தீர்வுகளைக் காண முடியும்,” என்று குறிப்பிடும் வெளிவிவகார அமைச்சரைப் போலவே நாட்டின் வர்த்தக அமைச்சரும் சமீபத்தில் “நாம் சீனாவுக்கு கௌரவம் கொடுத்தே நடக்கவேண்டும்,” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
பெரும்பாலும் அமெரிக்காவுடைய சீனாக் கொள்கையையே தனதாகவும் கொண்டிருக்கும் ஆஸ்ரேலியாவை விட வித்தியாசமான வழியில் சீனாவை நியூசிலாந்து அணுக விரும்புகிறது என்பதையே இது காட்டுகிறது. தவிர, சமீபத்தில் நியூசிலாந்து சீனாவுடனான வர்த்தக உறவுகளில் பல வரிகளை ஒழித்துக் கட்டியும் இருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்