சிரியாவின் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட ஒரு பெண் விண்ணப்பித்திருக்கிறார்.
பல வருடங்களாகவே போர்களால் சின்னாபின்னமடைந்திருக்கும் சிரியாவில் மே 26 ம் திகதி ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. பதவியிலிருக்கும் பஷார் அல் ஆசாத்தே மீண்டும் வெல்வதற்காகவே நடாத்தப்படும் ஜனாதிபதித் தேர்தல் என்றே அதைக் குறிப்பிடுகிறார்கள். அத்தேர்தலில் போட்டியிட ஏற்கனவே இருவர் அறிவித்திருக்கிறார்கள். மூன்றாவது நபராகப் போட்டியில் கலந்துகொள்ள விண்ணப்பித்திருப்பவர் பத்தேன் அல் நகர் என்ற 50 வயதுப் பெண் என்று அறிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதியாகப் போட்டியிடும் தகுதிகளுக்குட்பட்டவரெவரும் விண்ணப்பிக்கலாம் என்ற விதிப்படி அறிவிப்பவர்கள் போட்டியிடலாம். ஆனாலும் அவர்கள் 35 பேரைக் கொண்ட மக்கள் சபையால் ஆதரிக்கப்பட்டாலே போட்டியில் நிஜமாக அனுமதிக்கப்படுவர். பஷார் அல் ஆசாத் இதுவரை தனது விண்ணப்பத்தைக் கொடுக்கவில்லை.
2000 ம் ஆண்டு தனது தந்தையின் பின்னர் அந்தப் பதவியிலேறிய பஷார் அல் ஆசாத் 2014 இல் முதலாவது தடவையாக ஜனாதிபதித் தேர்தலை அறிவித்திருந்தார். அதில் பங்குபற்றி 90 % விகித வாக்குகளால் வெல்லவும் செய்தார். வரவிருக்கும் தேர்தலும் வெறும் கண் துடைப்பு நாடகமே என்று குறிப்பிடும் சர்வதேசம் அத்தேர்தலை ஒரு நிஜமானதாக ஏற்றுக்கொள்ளவில்லை.
சிரியாவில் நடந்துவரும் போரை நிறுத்திச் சகலரும் பங்குபற்றக்கூடிய தேர்தல் ஒன்றையே ஐ.நா-வும் சர்வதேசமும் ஏற்றுக்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக சிரியாவின் சகல தரப்பாரையும் சேர்த்துக்கொள்ளும் ஒரு புதிய அரசியலமைப்புச் சட்டம் உண்டாக்கப்படவேண்டும். அந்த அரசியலமைப்புச் சட்டத்தை ஒரு மக்கள் அங்கீகரிப்பு வாக்கெடுப்பு நடாத்திப் பெரும்பாலானவர்களின் ஆதரவைப் பெறவேண்டும் என்பவை ஐ.நா-வின் கோரிக்கைகளாகும்.
ஐ.நா-வின் கோரிக்கைகள் பற்றிய நடவடிக்கைகளெதுவும் இதுவரை எடுக்கப்படவில்லை. ரஷ்யா, ஈரான் ஆகிய நாடுகளின் மிண்டு கொடுத்தலுடன் பஷார் அல் ஆசாத் அரசு தொடர்ந்தும் ஆட்சி செய்து வருகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்