சூழலை நச்சாக்கும் வாயுக்களை வெளியிடுவதைக் குறைப்பதில் தமது குறிகளை மேலும் உயர்த்துகின்றன ஜப்பானும், அமெரிக்காவும்.
அமெரிக்க ஜனாதிபதியால் ஒழுங்கு செய்யப்பட்ட காலநிலை மாற்றத்துக்கு தடைக்கற்களைப் போடுவதற்கான நடவடிக்கைகள் பற்றிய சர்வதேச மாநாடு இன்று ஆரம்பித்தது. கொரோனாத் தொற்றுக்களின் நிலைமையால் தொலைத் தொடர்பு மூலம் இந்த மாநாட்டில் உலகத் தலைவர்கள் கலந்துகொள்கிறார்கள். எல்லோரும் எதிர்பார்த்ததை விட உயரமான குறிகளை ஜப்பானும், அமெரிக்காவும் அதிலே தத்தம் நாட்டுத் திட்டங்களாக வெளிப்படுத்தின.
அமெரிக்காவைப் பொறுத்தவரை சூழலைப் பாதிக்கும் நச்சுக்காற்றுகளை வெளியிடுவதை 2005 ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 50 % – 52% விகிதம் வரை 2030 இல் குறைப்பதாக ஜோ பைடன் தனது அரசின் திட்டத்தை அறிவித்தார். அதற்குச் சளைக்காமல் ஜப்பானின் பிரதமர் அதே 2030 இல் தனது நாடு 2013 ம் ஆண்டுடன் ஒப்பிட்டு 42 % வரை குறைக்கவிருப்பதாக அறிவித்தார்.
ஜப்பான் அதே 2030 இல் தனது நச்சுக்காற்றுக்கள் வெளியிடலை 26 % ஆல் குறைப்பதாக முன்னர் அறிவித்திருந்தது. அதனுடன் ஒப்பிடும்போது இது மேலும் உயரமான குறியாகும். அத்துடன் 2050 இல் ஜப்பான் நச்சுக்காற்றுக்களை வெளியிடுவதை முழுவதுமாக நிறுத்திவிடுமென்றும் யொஷிடெ சுகா அறிவித்தார்.
நேற்று ஐரோப்பிய ஒன்றியம் நச்சுக்காற்றுக்களை வெளியிடுவதை 2050 இல் நிறுத்துவதாகவும், 2030 இல் அதை 1990 ம் ஆண்டுடன் ஒப்பிட்டு 55 % ஆல் குறைப்பதாகவும் உறுதிபூண்டிருப்பதாக அறிவித்திருந்தது.
சாள்ஸ் ஜெ. போமன்