2017 ம் ஆண்டுக்குப் பின் முதல் தடவையாக மேலும் அதிக விபரங்களை கூகுள் எர்த் இணைத்திருக்கிறது.
எமது வாழ்வின் சாதாரண சந்தர்ப்பங்கள் பலவற்றில் உதவும் கூகுள் எர்த் கடந்த வருடங்களில் பல மில்லியன் பேருக்கு உலகின் பல பாகங்களை வெவ்வேறு பரிமாணங்களில், வெவ்வேறு தேவைகளுக்காகக் காட்டி வருகிறது. கல்விக்கூடங்களிலும் இதன் சேவை ஒரு பொக்கிஷமாகக் கருதப்படுகிறது.
செயற்கைக் கோள்கலால் வெவ்வேறு சமயங்களில் கடந்த 37 வருடங்களில் எடுக்கப்பட்ட 24 மில்லியன் படங்களை கூகுள் எர்த்தில் காணலாம். குறிப்பிட்ட ஒரு சமயத்தில் பூமியின் இன்னொரு பாகத்தின் குறிப்பிட்ட இடத்தை 4 பரிமாணங்களில் காணும் வழிவகைகளை கூகுள் எர்த் செய்திருக்கிறது. அவைகளுடன் நான்கு வருடங்களுக்குப் பின்னர் மேலும் அதிக விபரங்களை இணைத்திருப்பதாக கூகுள் எர்த் அறிவித்திருக்கிறது.
அதிகமான விபரங்களைக் காணமுடியாமலிருந்த மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்க பிராந்தியங்களின் புவியியல் படங்கள் பல இப்போதைய இணைப்பில் சேர்க்கப்பட்டிருக்கின்றன. அல்ஜீரியா, எகிப்து, ஜோர்டான், பஹ்ரேன், கத்தார், சவூதி அரேபியா, எமிரேட்ஸ், லிபியாவின் பகுதிகள் போன்றவற்றில் சமீப காலங்களில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் பலவற்றை இப்போது காணலாம்.
கடந்த அரை நூற்றாண்டில் எங்கள் பூமியில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களின் அளவான மாற்றம் பூமியின் சரித்திரத்தில் எப்போதுமே இத்தனை குறுகிய கால அளவில் ஏற்பட்டதில்லை. நிலமட்டத்தில் ஏற்பட்டிருக்கும் வெவ்வேறு விதமான கட்டடங்கள், நகரங்கள், குடியிருப்புக்கள் போன்றவை ஏற்படுத்தியிருக்கும் சூழல் மாற்றங்கள் கற்பனைக்கெட்டாதவை.
இன்னொரு முக்கிய விடயமாகக் காலநிலை மாற்றத்தையும் அதனால் புவியின் பிராந்தியங்களில் ஏற்பட்டு வரும் அசாதாரண அமைப்புக்களையும் குறிப்பிடலாம். அவைகளை கூகுள் Timelapse என்ற விபரங்களில் காணலாம். அங்கே கூகுள் தரவேற்றியிருக்கும் 800 வீடியோக்கள் மூலம் நேர-கால அளவில் குறிப்பிட்ட இடங்களில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களை இரண்டு, மூன்று பரிமாணத்தில் காணலாம்.
தொடர்ந்தும் கூகுள் எர்த் புவியில் கால வரையறையில் ஏற்படும் மாறுதல்களைக் காட்டும் படங்களை இணைக்கும் என்று உறுதிகூறுகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்