நாடு சிதைவதைத் தடுக்காவிடில் பிரான்ஸில் சிவில் யுத்தம் மூளும்! 20 முன்னாள் ஜெனரல்கள் கடிதம்.
அதிபர் மக்ரோனின் ஆட்சி பிரான்ஸை “இஸ்லாமியர்களது கைகளில்” சிக்கிச் சிதைய விட்டால் அதைத் தடுப்பதற்காக நாட்டில் ராணுவ ஆட்சி அமுல்செய்யப்பட வேண்டும் என்று முன்னாள் இராணுவ ஜெனரல்கள் இருபது பேர் கூட்டாகக் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.
இது தொடர்பாக இருபது ஜெனரல்களும் 80 முன்னாள் படை அதிகாரிகளும் உட்பட சுமார் ஆயிரம் பேர் கையொப்பமிட்டுள்ள
பகிரங்கக் கடிதம் ஒன்று பிரபல வலதுசார்பு “Valeurs Actuelles” சஞ்சிகையில் வெளியாகியிருக்கிறது. சுமார் அறுபது ஆண்டுகளுக்கு முன்பு அல்ஜீரியாவுக்கு சுதந்திரம் வழங்க பிரான்ஸ் முடிவு செய்த சமயத்தில் அதனை எதிர்த்த படைத் தளபதிகளால் முன்னெடுக்கப்பட்டுத் தோல்வியில் முடிந்த அரச கவிழ்ப்புச் சதிப் புரட்சியின் நினைவு நாளிலேயே அந்த சர்ச்சைக்குரிய கடிதம் வெளியாகி இருக்கிறது.
பிரான்ஸில் அதிகரிக்கும் இஸ்லாமியவாதமும் நகரங்களைச் சூழ வளர்ந்து வருகின்ற வெளிநாட்டு குடியேறிகளின் குடியிருப்புக்களையும் சுட்டிக்காட்டியிருக்கின்ற அந்தக் கடிதம் ” ஆயிரக்கணக்கானோரின் மரணங்களுக்கு அவை வழிவகுக்கும்” என்று எச்சரிக்கை செய்கிறது.
‘பிரான்ஸில் ஒரு சிவில் யுத்தம் வெடிப்பதைத் தடுக்க வேண்டுமானால் இராணுவப் புரட்சி அவசியம்’ என்று மக்ரோனுக்கு எழுதப்பட்ட அந்ததக் கடிதம் வலியுறுத்தி உள்ளது.
மஞ்சள் மேலங்கிப் போராட்டக்காரர்கள் மீது பொலீஸ் அராஜகத்தைப் பிரயோகிப்பதற்கு அரசை அனுமதித்தமைக்காக
அதிபர் மக்ரோன் மீதும் முன்னாள் படை ஜெனரல்கள் தங்களது கண்டனத்தைப்பதிவு செய்துள்ளனர்.
நாட்டின் அதிபர் தேர்தலுக்கு இன்னமும் ஓராண்டு காலம் உள்ள நிலையில் நாட்டின் பாதுகாப்புத் தொடர்பாக வெளிவந்திருக்கின்ற இந்தக் கடித விவகாரம் அரசியல் அரங்கில் பெரும் சலசலப்புகளை உருவாக்கியிருக்கிறது.
முன்னாள் படைத் தளபதிகளின் சர்ச்சைக்குரிய அந்ததக் கடிதத்துக்கு அரசு கடுமையான கண்டனத்தை வெளியிட்டிருக்கிறது. “இது ஒர் ஏற்றுக்கொள்ள முடியாத செயல்”, பல்லாயிரக்கணக்கான படைவீரர்களது முகத்தில் கரி பூசும் நடவடிக்கை” என்று தெரிவித்திருக்கிறார் பிரான்ஸின்பாதுகாப்பு அமைச்சர் புளோரன்ஸ் பார்லி (Florence Parly).
படையினரை அவமரியாதை செய்கின்ற இந்தச் செயலை புரிந்தவர்கள் அனைவரும் விசாரிக்கப்பட்டுத் தடைகள் மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கைகளுக்கு உட்படு த்தப்படுவார்கள் என்று அவர் கூறியுள்ளார்.
நாட்டின் பாதுகாப்புடன் நேரடியாகத் தொடர்பற்றவர்களும் சேவையில் உள்ள சிலரும் அந்தக் கடிதத்தின் பின்னணியில் உள்ளனர் என்று கூறப்படுகிறது. வலதுசாரித் தீவிரவாதத்துக்கும் பாதுகாப்புப் படைகளுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு உள்ளதா என்ற ஐயத்தையும் இந்தக் கடித விவகாரம் கிளப்பியுள்ளது.
மரீன் லூ பென் ஆதரவு
கடிதத்தை வெளியிட்ட இருபது ஜெனரல்களையும் பிரான்ஸுக்கான சண்டையில் தன்னோடு இணையுமாறு தீவிர வலதுசாரிக் கட்சித் தலைவி கேட்டிருக்கிறார். முன்னாள் இராணுவக் குழு ஒன்றினது இந்த நடவடிக்கையை தீவிர வலதுசாரிக் கட்சியின் தலைவியும் அதிபர் தேர்தலில் வெற்றி வாய்ப்பு உள்ளவராகக் கருதப் படுகின்ற பிரதான எதிர்க்கட்சி வேட்பாளருமாகிய மரீன் லூ பென் பகிரங்கமாக ஆதரித்திருப்பது கடும் கண்டனத்துக்கு உள்ளாகியிருக்கிறது.
குமாரதாஸன். பாரிஸ்.