தாய்லாந்தின் எல்லைக்கருகே ஒரு இராணுவ முகாமைக் கைப்பற்றியதாக மியான்மாரின் விடுதலை இயக்கமொன்று தெரிவிக்கிறது.

நீண்ட காலமாக மியான்மாரின் இராணுவத்துக்கெதிராக ஆயுதங்களுடன் போராடிவரும் வெவ்வேறு சிறுபான்மை இனத்தின் போராட்டக் குழுக்களுக்கும் சமீபத்தில் ஆதரவு அதிகரித்துள்ளது. அதன் காரணம் நாட்டின் இராணுவம் செய்த ஆட்சிக்கவிழ்ப்பால் மக்கள் நாடெங்கும் கொந்தளித்துக்கொண்டிருப்பதேயாகும். 

https://vetrinadai.com/news/myarmed-killed/

தாய்லாந்து எல்லையை அடுத்துச் செறிந்து வாழும் காரன் மக்களின் விடுதலை இயக்கம் (KNU)  கடந்த சில வாரங்களாக மியான்மாரின் இராணுவத்துடன் கடுமையான தாக்குதல் – எதிர்த்தாக்குதல்களில் ஈடுபட்டு வருவதாகத் தெரிகிறது. அந்த இயக்கம் செவ்வாயன்று காலை “இன்று நாம் மியான்மார் இராணுவத்தின் முகாமொன்றைக் கைப்பற்றியிருக்கிறோம்,” என்றூ ஊடகங்களுக்கு அறிவித்திருக்கிறது.

கடந்த மாதத்திலும் தாய்லாந்து – மியான்மார் எல்லைக்கருகே காரன் விடுதலை இயக்கம் இராணுவ முகாமொன்றைத் தாக்கி வீழ்த்தியது. அதற்குப் பதிலடியாகவே இராணுவம் தொடர்ந்தும் அவர்கள் மீது குறிவைத்துத் தாக்கி வருகிறது. அதனால் அப்பகுதியிலிருந்து சுமார் 24,000 பேர் புலம்பெயர்ந்திருக்கிறார்கள். தாய்லாந்துக்குள் சென்று தஞ்சம் கோரியிருப்பவர்கள் சுமார் 2,000 பேராகும்.

தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டுறவு அமைப்பான ஆசியான் மூன்று நாட்களுக்கு முன்பு மியான்மாரின் நிலைமை பற்றிக் கலந்தாலோசிப்பதற்காக ஜாகர்த்தாவில் சந்தித்தது. அந்த இடைக்கால கூட்டத்தில் முதல் தடவையாக மியான்மாரின் அரசைக் கவிழ்த்த இராணுவத்தின் தளபதி மின் அவுங் லாயிங் ஒரு வெளிநாட்டு விஜயம் செய்திருந்தார். அந்தச் சந்திப்பின் முன்னர் இந்தோனேசியத் தலைவர் “மியான்மார் இராணுவம் தனது மக்கள் மீதான கொலைகளையும் தாக்குதல்களையும் நிறுத்தவேண்டும்,” என்று கோரியிருந்தார்.

அக்கூட்டத்தின் முடிவில் மியான்மார் தனது நாட்டில் ஏற்பட்டிருக்கும் நிலமையைச் சீர்செய்ய ஜனநாயக ரீதியான வழிகளைக் கையாளவேண்டும் என்று அந்தப் பத்து நாடுகளின் அமைப்பு அறிக்கை விட்டிருந்தது. மியான்மார் மக்களின் வாக்குகளால் தேர்தலில் வென்ற தலைமையைச் சிறையிலிருந்து விடுதலை செய்ய வேண்டுமென்றும் குறிப்பிடப்பட்டது. 

ஜாகர்த்தா -மியான்மார் நிலைமை கூட்டம் பற்றிய பல எதிர்ப்புக் குரல்களும் அக்கூட்டம் நடந்த பின்னர் ஆரம்பித்துத் தொடர்ந்தும் எதிரொலிக்கின்றன. மியான்மார் மக்களின் இராணுவ எதிர்ப்பு அமைப்புக்களோ, நாட்டில் அமைதியாகப் போராடிவரும் மியான்மார் நிழல் அரசின் பிரதிநிதிகளோ அதில் பங்களிக்கவோ கருத்துகளைத் தெரிவிக்கவோ இடம் கொடுக்கப்படவில்லை. அப்படியான ஒரு கூட்டம் மியான்மாரின் இராணுவக் கூட்டுத் தலைமைக்கே ஆதரவாகவும், பலம் சேர்ப்பதாகவும் அமைகிறது என்று மியான்மாரில் போராடிவருபவர்களும், அவர்களுக்கு ஆசிய நாடுகளில் ஆதரவு தெரிவிக்கும் அமைப்புக்களும் தெரிவிக்கிறார்கள். 

அக்கூட்டத்தில் மட்டுமன்றி, ஐ.நா மற்றும், வெளி நாடுகள் “மியான்மார் இராணுவம் தனது தாக்குதல்களை விட்டுவிட்டுப் பேச்சுவார்த்தையில் இறங்கித் தீர்வு காணவேண்டும்,” என்று சொல்வதைத் தவிர வேறெதுவும் செய்யவில்லை என்று குற்றஞ்சாட்டப்படுகிறது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *