இத்தாலியின் இடதுசாரித் தீவிரவாத இயக்கத்தினர் ஏழு பேர் பிரான்ஸில் கைது செய்யப்பட்டார்கள்.
1960 முதல் 1980 ஆண்டுக் காலப் பகுதியில் இத்தாலியை குலை நடுங்கவைத்து வந்த இயக்கமான சிகப்புப் படை [Brigate Rosse] என்ற இயக்கத்தினர் ஏழு பேரை பிரான்ஸ் கைது செய்திருக்கிறது. அந்த இயக்கத்தினர் இத்தாலியில் பல கொலை, கொள்ளை, கடத்தல் ஆகியவற்றில் ஈடுபட்டிருந்தார்கள்.
பிரான்ஸ், இத்தாலி ஆகிய நாடுகளின் பொலீசாரும், உளவுப் படையினரும் கூட்டுறவாகச் செயற்பட்டு இந்தக் கைதுகளை ஒப்பேற்றியிருக்கிறார்கள். நீண்ட காலமாகத் தேடப்பட்டுவந்த இவர்களைக் கைது செய்த விடயம் இரண்டு நாடுகளிலுமே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அந்தக் கைதுகளுக்காக இத்தாலி தனது பக்கத்து நாடான பிரான்ஸுக்கு நன்றி தெரிவித்துப் பாராட்டியிருக்கிறது.
கைது செய்யப்பட்டிருக்கும் தீவிரவாத இயக்கத்தினர் இத்தாலியில் அவர்கள் பங்குபற்றாமலேயே நீதிமன்றத்தில் கடும் தண்டனைக்கு உள்ளாகியவர்களாகும். தேடப்பட்டுவரும் அவர்கள் அவர்கள் பிரான்ஸில் வாழ்வதாக அறிந்து இத்தாலிக்கு அந்த நாட்டினருடன் நீண்ட காலமாக மனஸ்தாபம் உண்டாகியிருந்தது. சுமார் நூறு இடதுசாரித் தீவிரவாதிகளைப் பிடித்துத் தருமாறு இத்தாலி கோரி வந்திருக்கிறது. முன்னாள் பிரெஞ்சு ஜனாதிபதி மிட்டரோன் அவர்களை இத்தாலிக்குப் பிடித்துக் கொடுப்பதில்லை என்று உறுதிபூண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வியாழனன்று மேலும் இரண்டு இத்தாலிய இடதுசாரித் தீவிரவாதிகள் பிரான்ஸ் பொலீசாரிடம் சரணடைந்தார்கள் என்று அறிவிக்கப்பட்டது.
சமீப வருடங்களில் பல தீவிரவாதத் தாக்குதல்களாலும் பாதிக்கப்பட்டு வரும் பிரான்ஸ் தீவிரவாதிகள் நீதியால் தண்டிக்கப்படவேண்டுமென்று முடிவெடுத்திருக்கிறது. தீவிரவாதத்தை ஒழித்துக்கட்ட ஐரோப்பிய நாடுகள் தமக்குள் நெருங்கி ஒத்துழைக்கவேண்டுமென்று பிரான்ஸ் விரும்புகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்