உணவுப்பொருட்கள், எரிபொருள் விலையுயர்வால் ஏற்பட்ட போராட்டங்களால் பெருவில் ஊரடங்குச்சட்டம்.
பெரு நாட்டின் தலைநகரான லீமாவிலும், பக்கத்து நகரான கல்வாவோவிலும் நாட்டின் ஜனாதிபதி பெத்ரோ கஸ்டில்லோ ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தியிருக்கிறார். சமீப காலத்தில் உயர்ந்துவரும் உணவுப்பொருட்களின் விலை, வரியுயர்வு, எரிபொருள் விலையுயர்வு ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட மக்கள் வீதிக்கு வந்து தமது எதிர்ப்பைக் காட்ட ஆரம்பித்திருக்கிறார்கள்.
மக்களின் எதிர்ப்பை எதிர்கொள்ள எரிபொருட்களின் மீதான வரியைக் குறைப்பதாக அரசு சில நாட்களுக்கு முன்னர் அறிவித்தது. ஆனாலும், பாரவண்டிச் சாரதிகளும் மற்றைய போக்குவரத்து நிறுவனங்களின் சாரதிகளும் திங்களன்று மீண்டும் போர்க்கொடியை உயர்த்தினார்கள். முக்கிய தேசிய சாலைகள் முடக்கப்பட்டன. நாட்டின் பல பகுதிகளிலும் அதைத் தொடர்ந்து மக்கள் எதிர்ப்புப் பரவ ஆரம்பித்திருக்கிறது.
மக்கள் நடத்திய ஊர்வலங்கள், கூட்டங்களில் ஆங்காங்கே வன்முறைகளும் நடந்தன. அதைக் காரணம் காட்டியே கஸ்டில்லோ நாட்டின் சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதற்காக ஊரடங்குச் சட்டத்தைப் பிறப்பித்திருக்கிறார். மக்கள் தமது வருமானத்துக்காக வேலைசெய்யப் போவதையும் தடுக்கும் ஊரடங்குச்சட்டத்தைப் பிறப்பித்ததன் மூலம் அரசு மக்களுடன் மோசமான முறையில் மோதுகிறது என்று நாட்டின் அரசியல் விமர்சகர்கள் குறிப்பிடுகிறார்கள்.
பெருவின் முன்னாள் சர்வாதிகாரத் தலைவர் அல்பெர்ட்டோ பூஜிமோரியின் அரசு 30 வருடங்களுக்கு முன்னர் மக்களின் எதிர்ப்பை எதிர்கொள்ள, பாராளுமன்றத்தைக் கலைத்து இராணுவத்தை அனுப்பிய நாளன்றே தற்போதைய இடதுசாரி ஜனாதிபதி ஊரடங்கைப் பிறப்பித்திருக்கிறார். நாட்டின் ஜனாதிபதிகளை வெளியேற்றுவது அடிக்கடி நடக்கும் பெரு நாட்டில் எட்டு மாதங்களே ஆட்சியிலிருக்கும் கஸ்டில்லோ ஏற்கனவே இரண்டு தடவைகள் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானங்களை எதிர்கொண்டிருக்கிறார்.
உலகின் பல நாடுகளில் நடப்பது போன்றே பொதுவில் சகல பொருட்களின் விலைகளும் சமீப மாதங்களில் பெருமளவில் உயர்ந்திருக்கின்றன. கொவிட் 19 பரவலால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட பெரு அந்தப் பொருளாதாரத் தாக்குதல்களிலிருந்து இதுவரை வெளிவரவில்லை. அரசின் பொருளாதார அறிக்கையின்படி நாட்டின் விலையுயர்வு கடந்த 26 வருடங்களில் காணாத அளவு அதிகமாகியிருக்கிறது.
தொழிற்சங்கங்களால் நாடெங்கும் அறிவிக்கப்பட்டிருக்கும் அரசுக்கு எதிரான போராட்டங்களை எதிர்கொள்ள ஜனாதிபதி நாட்டின் ஆகக்குறைந்த ஊதியங்களை 10 % ஆல் அதிகரிப்பதாக அறிவித்திருந்தார். தொழில்சங்கத்தினர் அதை ஏற்றுக்கொள்ள மறுத்து ஏற்பட்டிருக்கும் விலையுயர்வை எதிர்கொள்ள ஊதிய உயர்வு மேலும் அதிகரிக்கப்படவேண்டும் என்கிறார்கள்.
சாள்ஸ் ஜெ போமன்