லவ்ரோவின் ஆபிரிக்கப் பயணத்தையடுத்து அக்கண்டத்தில் ஆதரவு தேட வருகிறார் பிளிங்கன்.
ஞாயிறன்று தென்னாபிரிக்காவுக்கு வந்திறங்கியிருக்கிறார் அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் அண்டனி பிளிங்கன். தனது மூன்று ஆபிரிக்க நாடுகள் விஜயத்தில் அவர் ரஷ்யா – ஆதரவு அரசியலுக்கு முட்டுக்கட்டைகள் போடும் நடவடிக்கைகளில் ஈடுபடுவார். தென்னாபிரிக்காவுக்கு அடுத்தபடியாக அவர் கொங்கோ குடியரசு, ருவாண்டா ஆகிய நாடுகளுக்கும் பயணம் செய்வார்.
உக்ரேனுக்கு எதிரான ரஷ்யாவின் போருக்கு ஆபிரிக்கக் கண்டத்தில் தெளிவான ஆதரவோ எதிர்ப்போ இல்லை. அங்குள்ள நாட்டுத் தலைவர்கள் அப்போரில் ரஷ்யாவைப் பகிரங்கமாக எதிர்த்துக்கொள்ளாமலே தவிர்த்து வருகிறார்கள். ஐரோப்பிய காலனித்துவத்துக்கு எதிராக ரஷ்யா ஆபிரிக்க நாடுகளுக்குப் பாரம்பரியமாக உதவி வந்திருக்கிறது. எனவே, ஆபிரிக்க நாட்டு மக்களிடையே ரஷ்யாவுக்குத் தொடர்ந்தும் ஆதரவு இருக்கிறது. அத்துடன் ஆபிரிக்க நாடுகள் தமது அத்தியாவசிய உணவுத் தானியங்களுக்காக ரஷ்யாவிலும், உக்ரேனினும் தங்கியிருக்கின்றன.
சமீபத்தில் ரஷ்யாவின் வெளிவிவகார அமைச்சர் லவ்ரோவ் தனது நாட்டுக்கான அரசியல் ஆதரவு தேடி ஆபிரிக்க நாடுகள் சிலவற்றுக்குச் சுற்றுப்பயணம் செய்திருந்தார். அவரையடுத்து பிரெஞ்சு ஜனாதிபதி மக்ரோன் ஐரோப்பிய அரசியல் ஆதரவு நோக்கத்துடன் பெனின், கினியா பிஸௌ, கமரூன் ஆகிய நாடுகளுக்குச் சென்றிருந்தார். கென்யா, செனகல், நைஜீரியா ஆகிய நாடுகளுக்கு ஏற்கனவே தான் பதவியேற்றதும் அண்டனி பிளிங்கன் சுற்றுப்பயணம் செய்திருந்தார்.
சாள்ஸ் ஜெ. போமன்