மியான்மாரின் ஐரோப்பிய ராச்சியத்துக்கான தூதுவர் தனது தூதுவராலயத்தினுள் நுழையத் தடை.
லண்டனிலிருக்கும் தனது தூதுவராலயத்தைத் தன்னுடன் வேலை செய்து வருபவர்கள் சிலரும், மியான்மாரின் இராணுவத் தலைமைக்கு வேண்டப்பட்டவர்களும் கையகப்படுத்திக் கொண்டார்கள் என்கிறார் தூதுவர் கியா ஸ்வார் மின் [Kyaw Zwar Minn]. கைப்பற்றியவர்கள் தன்னைத் தூதுவராலயத்தினுள் நுழைய முடியாமல் வெளியே வைத்துப் பூட்டிவிட்டார்கள் என்கிறார் அவர்.
மியான்மார் மக்களால் தெரிந்தெடுக்கப்பட்ட தலைவர் ஔன் சான் சு ஷீ – க்குத் தனது ஆதரவைக் கடந்த மாதத்தில் வெளிப்படையாகக் காட்டியவர் ஐக்கிய ராச்சியத்துக்கான மியான்மார் தூதுவர். அதனால் அவர் மியான்மாருக்குத் திருப்பியழைகப்பட்டார். ஆனால், அந்த உத்தரவை ஏற்காமல் லண்டனிலேயே தங்கிவரும் அவரைக் கதவுக்கு வெளியே விட்டுப் பூட்டிவிட்டார்கள் தூதுவராலயத்தைக் கைப்பற்றியிருக்கும் மியான்மார் இராணுவ ஆதரவாளர்கள்.
மியான்மாரில் இராணுவத்தை (Tatmadaw) எதிர்த்துவரும் மக்களின் போராட்டம் அடங்கவில்லை. பல உத்திகளையும், சின்னங்களையும் கையாண்டு தங்களுடைய எதிர்ப்பைத் தளர்வின்றிக் காட்டிவருகிறார்கள் அவர்கள். இதுவரை சுமார் 560 பேராவது சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் 23 பேர் பிள்ளைகளாகும்.
தட்மடோவ் என்று உத்தியோகபூர்வமாக அழைக்கப்படும் மியான்மாரின் இராணுவத்தை எதிர்த்துப் நாட்டின் பல சிறுபான்மையினரும் தனித்தனியாகப் பல வருடங்களாக ஆயுதப் போரில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களில் தாய்லாந்தை அடுத்திருக்கும் மியான்மார் பிராந்தியத்துக்குள் வாழும் கரன் இனத்தவரும் ஒருவர். சுமார் 3,000 பேரைக் கொண்ட விடுதலை இயக்கம் (Karen National Union) அவர்கள் கையிலிருக்கிறது.
கரன் மாநிலத்தில் தட்மடோவுக்கு எதிரான போராட்டம் வலுவானது என்பதால் அந்த மாநிலத்தின் மீது சமீப வாரங்களில் விமானத் தாக்குதல்களை நடாத்தி வருகிறது இராணுவ அரசு. பல நூறுபேர் காயப்பட்டுப் பல்லாயிரக்கணக்கானோர் காடுகளுக்குள் புகுந்து மறைந்திருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. ஒரு பகுதியினர் தாய்லாந்துக்குள் அகதிகளாகவும் தஞ்சம் கோரியிருக்கிறார்கள்.
தாய்லாந்து தம்மிடம் தஞ்சம் கோரிய கரன் மக்கள் படிப்படியாகத் தாமே விரும்பித் திரும்பிப் போவதாக அறிவித்து வருகிறது. அதன் காரணம் தாய்லாந்தின் இராணுவம் அவர்களைத் துரத்துவதே என்று குற்றஞ்சாட்டுபவர்களும் உண்டு. மியான்மார் இராணுவத் தலைமையுடன் நீண்டகால நல்லுறவைக் கொண்டிருக்கிறது தாய்லாந்தின் இராணுவ அரசு. எனவே, அவர்கள் மியான்மாரை வெட்டிவிடுவார்கள் என்று நம்பமுடியாது என்று அரசியல் அவதானிப்பாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்