நத்தான்ஸ், ஈரானிலிருக்கும் நிலக்கீழ் யுரேனியம் கையாளும் ஆராய்ச்சி மையத்தில் இஸ்ராயேல் தனது கைவரிசையைக் காட்டியதா?
சனிக்கிழமையன்று ஈரான் பெருமையுடன் தனது நாட்டின் அணு ஆராய்ச்சித் தொழில்நுட்ப நாளைக் கொண்டாடியது. தெஹ்ரானுக்கு வெளியேயிருக்கும் நத்தான்ஸ் நகர யுரேனிய ஆராய்ச்சி மையத்தில் ஒரு விபத்து ஏற்பட்டிருப்பதாக ஞாயிறன்று காலை ஈரான் அறிவித்தது.
என்ன நடந்தது, விளைவுகள் என்னவென்பதைக் குறிப்பிடாமல் வெறுமனே “விபத்து” என்று குறிப்பிடப்பட்ட அந்தச் சம்பவம் ஒரு திட்டமிட்ட தொலைதூரத் தாக்குதலென்று சில மணி நேரங்களில் சந்தேகம் எழுப்பப்பட்டது. ஞாயிறு இரவு அது ஒரு தீவிரவாதத் தாக்குதல் என்றும் அதன் பின்னணியில் இஸ்ராயேல் இருப்பதாகவும் ஈரான் குற்றஞ்சாட்டியது.
சர்வதேச அணுக்கையாளல் ஒப்பந்தத்திற்கு மீறி ஈரான் நத்தான்ஸில் ஆராய்ச்சி நடாத்தி வருகிறது. டொனால்ட் டிரம்ப்பின் காலத்தில் அமெரிக்கா விலகிக்கொண்ட ஒப்பந்தத்தில் தானாகவே ஈரானை மீண்டும் சேர்த்துக்கொள்ளாவிட்டார் அந்த ஆராய்ச்சி மையத்தில் சர்வதேச அணு ஆராய்ச்சி மைய அதிகாரிகள் பார்வையிட அனுமதிக்கமுடியாதென்றும் ஈரான் மறுத்து வருகிறது.
ஞாயிறு காலையில் நத்தான்ஸ் ஆராய்ச்சி மையத்தில் திடீரென்று மின்சாரமற்றுப் போனது. நிலக்கீழ் ஆராய்ச்சி நிலையத்தில் மட்டுமன்றி நிலமட்டத்துக்கு மேலேயும் மின்சாரத் தொடர்பில்லாமல் போனதாக ஈரானுக்குள்ளிருந்து வெளியான தகவல்கள் மூலம் தெரியவந்தது. ஈரான் உண்மையான நிலபரத்தை மறைத்து வந்தாலும், நடந்திருக்கும் தாக்குதலின் விளைவால் குறிப்பிட்ட ஆராய்ச்சி மையம் ஒன்றோ அல்லது அதற்கு மேற்பட்ட மாதங்களுக்கோ இயங்க முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாக அங்கிருந்து கசிந்த செய்திகள் குறிப்பிடுகின்றன.
அலி அக்பார் சலேகி என்ற ஈரானிய அணு ஆராய்ச்சி மைய நிர்வாகி நடந்திருப்பது ஒரு தொலைதூரத்தீவிரவாதத் தாக்கலாகும் என்று தொலைக்காட்சிப் பேட்டியில் தெரிவித்தார். அங்கு அதிர்ஷ்டவசமாகப் பெரிய விளைவுகளேதும் ஏற்படவில்லையென்று குறிப்பிட்ட ஈரானிய அதிகாரிகள் வேறெந்த விபரங்களையும் வெளியிட மறுத்து வருகிறார்கள்.
அதேசமயம் இஸ்ராயேலிய ஊடகங்கள், ஈரானில் ஒரு தொலைதூரத் தாக்குதலை இஸ்ராயேல் தனது உளவுகாரர்கள் மூலமாக நடாத்தியதாகச் செய்திகள் வெளியிட்டன. தமது ஆதாரங்களை வெளியிடாமலே இஸ்ராயேலின் உளவு அமைப்பான மொசாட் தான் அந்தத் தாக்குதலைத் திட்டமிட்டு நிறைவேற்றியிருப்பதாக அவை குறிப்பிடுகின்றன.
கடந்த வருடம் இதே நத்தான்ஸ் அணு ஆராய்ச்சி நிலையத்தில் ஒரு தீவிபத்து உண்டானது. அதுவும் வெளியேயிருந்து தொழில் நுட்ப இயக்கம் மூலம் செய்யப்பட்டதாகப் பின்னர் தெரிவிக்கப்பட்டது. 2010 இலும் நத்தான்ஸின் அணு ஆராய்ச்சியை இயக்கும் பொறியின் இயக்கங்கள் Stuxnet என்ற ஒரு கணனிச் செயற்பாட்டைப் பாவித்து செயற்பாடின்றிச் செய்யப்பட்டது. Stuxnet என்ற கணனிச் செயலியை இஸ்ராயேலும் அமெரிக்காவும் சேர்ந்தே வடிவமைத்ததாக அமெரிக்கா பின்னர் குறிப்பிட்டிருந்தது.
அணு ஆயுத ஆராய்ச்சியில் ஈரான் எந்தவித முன்னேற்றத்தில் ஈடுபட முயன்றாலும் அதைத் தடுப்பதாகச் சூழுரைத்துச் செயற்பட்டுவரும் இஸ்ராயேலே ஈரானில் பல தடவைகள் நடந்துவரும் தொழில் நுட்பத் தாக்குதல்களுக்குக் காரணமென்று பரவலாக நம்பப்படுகிறது. இஸ்ராயேலோ, “ஈரான் அணு ஆயுத உற்பத்தியை முற்றாக நிறுத்துவது மத்திய கிழக்கில் எங்கள் பாதுகாப்புக்கு மிக அவசியம். அதற்காக எதையும் செய்யத் தயங்கமாட்டோம்,” என்று பல தடவைகள் பகிரங்கமாகக் குறிப்பிட்டு வருகிறது.
தற்போது அமெரிக்காவில் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுவரும் பென்னி காண்ட்ஸ், “நாம் தொடர்ந்தும் எங்கள் நெருங்கிய நண்பர்களான அமெரிக்காவுடன் சேர்ந்து செயற்பட்டு வருகிறோம். ஈரான் எந்தவித அணு ஆயுத ஆராய்ச்சி ஒப்பந்தத்தில் இணைவதானாலும் அது அமெரிக்காவுக்குச் சாதகமாக, உலகுக்கோ, எங்கள் பிராந்தியத்துக்கோ ஆபத்தில்லாமலிருக்குமாறு பார்த்துக்கொள்வோம்,” என்று ஞாயிறன்று குறிப்பிட்டிருக்கிறார்.
சாள்ஸ் ஜெ. போமன்