அமெரிக்கா விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் அடுத்த சந்திரப் பயணத்துக்கான கப்பலைக் கட்டப்போகிறது ஸ்பேஸ் எக்ஸ்.
அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான நாஸா அடுத்த தரம் தனது விண்வெளி வீரர்களைச் சந்திரனுக்கு 2024 இல் அனுப்புவதற்குத் திட்டமிட்டிருக்கிறது. அந்தத் திட்டத்துக்கான விண்வெளிக் கப்பலைக் கட்டுவதற்காகத் தனியார் நிறுவனங்களை அழைத்திருந்தது. அவைகளில் Space X நிறுவனத்தின் திட்டம் தெரிந்தெடுக்கப்பட்டிருக்கிறது. அமெஸான் நிறுவனமும் இந்தத் திட்டத்தில் போட்டியிட்டது, ஆனால் அவர்கள் திட்டம் நாஸாவால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
கடந்த டிசம்பரில் நாஸா 18 விண்வெளி வீரர்களைத் தமது வரவிருக்கும் விண்வெளிப் பயணங்களுக்காகத் தெரிந்தெடுத்தன. அவர்களிலிருவர் 2024 இல் சந்திரனுக்கு Space X விண்வெளிக் கப்பலில் பயணம் செய்வார்கள். அவ்விருவரில் ஒருவர் பெண்ணாகும். இத்திட்டத்துக்காக நாஸா 2.9 பில்லியன் டொலர்களைச் செலவிடத் திட்டமிட்டிருக்கிறது.
ஆர்ட்டமிஸ் [ Artemis]என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்தத் திட்டத்தின்படி சந்திரனில் படிப்படியாக ஆராய்ச்சிகளை அதிகப்படுத்துவது ஒரு முக்கிய நோக்கமாகும். அந்த ஆராய்ச்சிகள் எதிர்காலத்தில் செவ்வாய்க் கிரகத்தில் மனிதனை காலூன்றவைக்கும் விதமாக விஸ்தரிக்கப்படும். இந்தத் திட்டத்தில் நாஸாவுடன் ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி மையமான ஏஸாவும் இணைந்திருக்கிறது.
“இந்த சந்திரமண்டலக் காலூன்றலின் மூலம் விண்வெளி ஆராய்ச்சித்துறையிலும் ஆண் – பெண் சமத்துவம் என்ற கோட்பாடு நிறைவேற்றப்படும்,” என்று அறிவித்திருக்கும் நாஸா விரைவில் முதலாவது வெள்ளையரல்லாதவரையும் சந்திரனுக்கு அனுப்பவிருப்பதாகவும் தெரிவிக்கிறது. 1972 க்குப் பின்னர் இதுவே அமெரிக்காவின் அடுத்த சந்திரப் பயணமாகும்.
உலகப் பெரும் பணக்காரரான ஏலொன் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் நாஸா ஏற்கனவே கூட்டுச்சேர்ந்து வெற்றிகரமாகச் செயற்பட்டிருக்கிறது. 2024 இல் விண்வெளி வீரர்களைச் சந்திரனுக்கு அனுப்ப முதல் ஒரு மனிதர் பயணிக்காத விண்வெளிக்கப்பல் சந்திரனுக்கு அனுப்பப்படும். அது பின்னர் மனிதர்களை அனுப்புவதற்கான பரீட்சாத்தரப் பயணமாக இருக்கும்.
சாள்ஸ் ஜெ. போமன்