சீனாவுடன் மோதாமல் தவிர்த்துப் போக முயன்ற டுவார்ட்டே பொறுமையிழந்துவிட்டார்.
தென்சீனக் கடற்பிராந்தியத்தியமெங்கும் சீனா சண்டியன் போல வியாபித்துத் தனதென்று ஸ்தாபிக்க முயன்று வருவதை இதுவரை நேரடியாகக் கண்டிக்காமல் தவிர்த்தவர் பிலிப்பைன்ஸ் பிரதமர். அதனால் அவர்மீது நாட்டினுள் கடுமையான விமர்சனங்களும் எழுந்து வந்தன. வேறு வழியின்றி வாய்க்குள்ளிருந்த கொழுக்கட்டையை விழுங்கிவிட்டு நாட்டின் எல்லைகளில் கடற்படையை நிறுத்துவது பற்றி யோசிக்கப் போவதாகக் குறிப்பிடுகிறார் அவர்.
கடந்த மாதம் பிலிப்பைன்ஸின் கடலெல்லைக்குள் நிறுத்தப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான சீனக் கப்பல்களை அங்கிருந்து அகற்றச் சீனா ஆரம்பத்தில் மறுத்து வந்தது. இறுதியில் அவைகள் அங்கிருந்து விலக்கப்பட்டு ஆறு கப்பல்கள் மட்டும் தொடர்ந்தும் ஒன்றாக இணைக்கப்பட்டு அங்கேயே நிற்கின்றன. பிலிப்பைன்ஸின் கடற்படைக் காவல் கப்பல் அதனருக்கில் சென்று படங்களையும் எடுத்து வெளியிட்டிருக்கிறது.
முன்பு அங்கே நிறுத்தப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான கப்பல்களுடன் மீதமிருக்கும் ஆறு கப்பல்களும் முன்பே அங்கு நின்றிருந்தவையே. பிலிப்பைன்ஸ் அங்கே கப்பல்கள் நிறுத்தப்பட்டது முதல் எடுக்கப்பட்ட படங்களைச் சர்வதேச நிறுவனங்களுக்கும் பகிர்ந்துகொண்டிருந்தது. அவைகளை ஆராய்ந்ததில் அவைகளின் பின்னணியில் சீனாவின் இராணுவத்தின் ஒரு பாகமே இருப்பதாகத் தெரியவருகிறது.
“எனக்கு அங்கே மீன் பிடிப்பது பற்றி இனி ஆர்வமில்லை. அங்கே எங்களெல்லாருக்கும் தேவையான அளவு மீன்கள் மிச்சமில்லை. எங்கள் பாகத்திலிருக்கும் எரிநெய் வளங்களை நாம் காக்கவேண்டும். அதற்காக எங்கள் இராணுவ, கடற்படைகளைகளை அனுப்பலாமா என்று சிந்திக்கிறேன்,” என்று பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி டுவார்ட்டே குறிப்பிடுகிறார். அதேசமயம் தொடர்ந்தும் சீனாவுடன் சேர்ந்து சீனக்கடலிலிருப்பதைப் பகிர்ந்துகொள்வது பற்றிய தனது ஆர்வத்தையும் வெளிப்படுத்தினார்.
சீனாவுடன் நேரடியாக மோதுவது பெரும் சேதங்களை விளைவிக்கும் என்று தொடர்ந்தும் சுட்டிக்காட்டுகிறார் டுவார்ட்டே. அவரது நெருங்கிய நட்பு நாடான அமெரிக்கா சமீபத்தில் தமது பிலிப்பைன்ஸுடனான ஒப்பந்தத்தைச் சுட்டிக்காட்டி அவர்களுக்காகத் தாம் ஆதரவு கொடுப்பதை அடிக்கோடிட்டுக் காட்டியிருக்கிறது.
இதேசமயம் சீனா தனது சினோவாக் தடுப்பூசிகள்களை மில்லியன்களளவில் பிலிப்பைன்ஸுக்குக் கொடுக்க உறுதிசெய்திருக்கிறது. அவை போதாத நிலையில் பிலிப்பைன்ஸ் மேற்கு நாடுகளிலிருந்தும், ரஷ்யாவிடமிருந்தும் கொரோனாத் தடுப்பு மருந்துகளுக்காகக் காத்திருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்