நகர்காவலராக இருந்த டெரிக் சௌவின், புளொய்ட் இறப்புக்குக் காரணமென்று நீதிபதிகள் தீர்ப்பு.
மினியாபொலீஸைச் சேர்ந்த 46 வயதான ஜோர்ஜ் புளொய்டைக் கைது செய்ய முயலும்போது அவர் மீது அளவுக்கு மீறிய சக்தியையும் வன்முறையையும் பாவித்ததாக நான்கு பொலீசார் நீதியின் முன்னால் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் முதல் குற்றவாளியாக விசாரிக்கப்பட்ட டெரிக் சௌவினை அந்த இறப்புக்கு முதலாவது காரணக்காரன் எ ன்று நீதிமன்ற விசாரணைக்குப் பின்னர் நீதிபதிகள் முடிவுசெய்திருக்கிறார்கள்.
கடந்த வருடம் மே மாதத்தில் நடந்த இந்தச் சம்பவத்தின்போது கடையொன்றில் ஜோர்ஜ் புளொய்ட் போலி 20 டொலரைக் கொடுத்ததாக வந்த புகாரை விசாரிக்க சௌவின் உட்பட நான்கு பொலீசார் போயிருந்தார்கள். அச்சமயம் புளொய்டைப் பிடித்துக் கீழே தள்ளி வயிற்றுப் பக்கம் நிலத்தோடு வைத்து அமத்தி கைகளைப் பின்னால் இழுத்து விலங்கு போட்டார்கள்.
நிலத்தோடு வைத்து அழுத்தியபோது சௌவின் தனது முழங்கால்களால் புளொய்டின் கழுத்தைச் சுமார் ஒன்பது நிமிடங்கள் நெருக்கிக்கொண்டிருந்தார். புளொய்ட் அப்போது பல தடவைகள் “என்னால் மூச்சு விட முடியவில்லை,” என்று சொல்லித் திமிறியபோது தொடர்ந்தும் அவரிடமிருந்து எவ்வித நகர்வுகளும் வராதவரை கீழே அழுத்திப் பிடித்திருந்தார்கள். இதைப் பார்த்துக்கொண்டிருந்த பலர் உரக்கக் கத்தி நிறுத்தச் சொன்னதைப் பொலீசார் உதாசீனம் செய்தார்கள். அவையெல்லாவற்றையும் அச்சம்பவத்தைப் பார்த்தவர்கள் தம்மிடமிருந்த கமராக்களில் பதிவாக்கிக்கொண்டிருந்தனர்.
ஒன்பது நிமிடங்கள் நடந்த இச் சம்பவத்தை அடுத்து, புளொய்ட் அசையாமல் கிடக்கவே மருத்துவசாலைக்கு எடுத்துச் சென்றார்கள். அங்கே புளொய்ட் “மருத்துவ உதவி சரியான தருணத்தில் கிடைக்காததால்” இறந்துவிட்டதாக பிரகடனப்படுத்தப்பட்டது. அவ்வறிக்கையை பொலீசார் வெளியிட்டவுடன் சமூக வலைத்தளமொன்றில் புளொய்ட் கைதுசெய்யப்பட்ட விபரங்களுடனான வீடியோப் படம் முதலாவதாக தரவேற்றப்பட்டு வெளியாகியது. உடனடியாக பொலீசார் தரப்பிலிருந்து அந்த இறப்பு நாட்டின் மத்திய புலனாய்வுத்துறையினால் விசாரிக்கப்படும் என்ற அறிக்கை வெளியிடப்பட்டது.
ஜோர்ஜ் புளொய்ட் கைதுசெய்யப்பட்ட விதத்தை வெளியிட்ட படங்களும், சாட்சிகளின் விபரங்களும் வெளியாக மின்னசோட்டா கொதிக்க ஆரம்பித்தது. பல தடவைகளிலும் இனத்துவேஷங்களை அனுபவித்த அந்த பகுதியின் கறுப்பின மக்களும், மனித உரிமை அமைப்புக்களும் மறியல்களும், பேரணிகளும் நடாத்த ஆரம்பித்த்தன. அது வேகமாக அமெரிக்காவெங்கும் பரவியது.
உரிமைக்காகக் குரலெழுப்பியவர்களை “குண்டர்கள்” என்று விளித்து “கொள்ளையரை அடக்க துப்பாக்கிச் சூடு நடாத்தப்படும்,”[“When the looting starts, the shooting starts.”] என்று சாடினார் அன்றைய ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப். எரியும் நெருப்பில் எரிநெய் ஊற்றியது போல அவ்வார்த்தைகள் நாடெங்கும் எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தின. நீண்ட காலமாக அமெரிக்கா காணாத அளவில் கறுப்பின மக்கள் வீதியிலிறங்கிப் போராட ஆரம்பித்தனர். வன்முறைகளும் ஆங்காங்கே நடந்தன.
இவைகளின் விளைவாக புளொய்ட்டின் இறப்பு பற்றிய முழு விசாரணை நடாத்தப்பட்டது. இன்னொரு பக்கம் பொலீசார் அளவுக்கதிகமான வன்முறையைப் பிரயோகித்தல் பற்றிய விவாதங்கள் எழுந்து அதற்கான கட்டுப்பாடுகள் என்னவென்பது பற்றிய கேள்விகள் எழுந்திருக்கின்றன. புளொய்ட்டின் இறப்பில் அவரைக் கைதுசெய்த பொலீசாருக்குப் பங்கிருக்கிறது என்று குறிப்பிடப்பட்டு அவர்கள் பதவி விலக்கப்பட்டு நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்குதல் செய்யப்பட்டன. முதலாவது குற்றவாளியான சௌவின் கைதுசெய்யப்பட்டுப் பாதுகாப்புச் சிறையிலடைக்கப்பட்டார்.
தமது தவறுக்காக மினியாப்பொலீஸ் நகரம் சௌவின் குடும்பத்தினருக்கு 27 மில்லியன் டொலர்களை நஷ்ட ஈடாகக் கொடுத்திருக்கிறது.
திட்டமிடாமல் செய்யப்பட்ட கொலை. கவனமின்றி சௌவின் நடந்ததால் ஏற்பட்ட கொலை என்று நீதிபதிகள் சௌவின் மீதான மூன்று வார வழக்கு விசாரணையின் பின்னர் தீர்ப்புக் கூறியிருக்கிறார்கள். எட்டு வாரங்களின் பின்னர் தண்டனை பற்றிய விபரங்கள் வெளியாகும். கொலையில், சௌவின் தவிர்ந்த மற்றைய மூன்று பொலீசாரின் பங்குகள் என்னென்ன என்பது பற்றிய விசாரணைகள் ஆகஸ்ட் மாதத்தில் ஆரம்பிக்கவிருக்கின்றன.
இறப்புச் சமயத்தில் புளொய்ட் போதை மருந்து பாவித்திருந்தார், அது அவரது இரத்தத்தில் இருந்தது. புளொய்ட் ஏற்கனவே பலவீனமான இருதயச் சக்தியுடையவராக இருந்தார் என்பவை பிரேத விசாரணைகளில் தெரியவந்திருந்ததால் சௌவினின் வழக்கறிஞர்கள் இறப்புக்குக் காரணம் முழுவதும் சௌவில் அல்ல என்று வாதிட்டார்கள்.
அமெரிக்கா மட்டுமன்றி உலகமே காத்திருந்த இந்த வழக்கின் தீர்ப்பாக சௌவின் குற்றவாளியே என்பது வெளியானது குறித்துப் பலரும் ஆசுவாசப் பெருமூச்சு விடுகிறார்கள். எதிர்மறையான தீர்ப்பு அமெரிக்காவில் நிச்சயமாக மீண்டுமொரு கொந்தளிப்பைத் தூண்டிவிட்டிருக்குமென்பது நிச்சயம்.
வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்புக்கு முன்னரே ஜனாதிபதி ஜோ பைடன், புளொய்ட்டின் குடும்பத்தினரை அழைத்துத் தனது ஆதரவை அவர்களுக்குத் தெரிவித்திருந்தார். “வழக்கு விசாரணைகளின் பின் குற்றம்பற்றிய தெளிவான விபரங்கள் தெரியவந்திருக்கின்றன,” என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
சாள்ஸ் ஜெ.போமன்