“பிரிட்டன் மக்களின் சமூக விலகலையும், முகக்கவசங்களையும் ஜூன் மாதத்துடன் நிறுத்துங்கள்”, என்று வேண்டும் விஞ்ஞானிகள்.
சமூக விலகலைக் கடைப்பிடித்தும், முகக்கவசங்களை அணிந்தும் வரும் பிரிட்டிஷ் மக்களின் அக்கட்டுப்பாடுகளை நீக்கிவிடுங்கள் என்று பிரிட்டிஷ் அரசிடம் கோருகிறார்கள் 22 விஞ்ஞானிகள். போரிஸ் ஜோன்சன் நாட்டின் சமூக முடக்கங்களை நீக்குவதற்காக அறிவித்திருக்கும் ஜூன் 21 ம் திகதியே அக்கட்டுப்பாடுகளையும் நீக்கிவிடும்படி விஞ்ஞானிகள் தமது கடிதத்தில் கோருகிறார்கள்.
“ஒரு நல்ல சமூகம் ஒரேயொரு வியாதியைப் பற்றி நினைத்துக்கொண்டு கட்டாயக் காரியங்களை நிறைவேறியபடி வாழமுடியாது,” என்று குறிப்பிடும் அவர்கள் இரண்டு வீட்டார் சந்திக்கலாம் என்ற கட்டுப்பாடு நிறுத்தப்படும் மே 17 திகதி முதல் பாடசாலைகளில் முகக்கவசங்கள் அணியும் கட்டுப்பாட்டை விலக்கும்படி கேட்கிறார்கள். மக்களே தத்தம் வாழ்வின் கட்டுப்பாடுகளை எடுக்கவேண்டுமென்பதே புத்திசாலித்தனமானது என்று அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
கட்டுப்பாடுகளுக்குப் பதிலாக கைகளைக் கழுவுதல், வாழும் இடங்களைத் துப்பரவாக வைத்திருத்தல் போன்ற கிருமிகள் பரவாதிருக்கும் நடவடிக்கைகளைக் கைக்கொள்ளப் பழக்கும்படி கேட்டுக்கொள்கிறார்கள். அத்துடன் பெருமளவிலான சமூகப் பரிசோதனைகளை நிறுத்தி, தடுப்பூசிச் சான்றிதழ் கொடுக்கும் திட்டத்தையும் கைவிடும்படி அவர்கள் கோருகிறார்கள்.
“நாங்கள் தொடர்ந்தும் கடுமையான கட்டுப்பாடுகளைக் கைக்கொண்டு அதே சமயம் தொற்றுக்களை வெற்றிகரமாகத் தடுக்கும் தடுப்பு மருந்துகளையும் எடுக்கவேண்டுமென்று அடிக்கடி கேட்கிறோம். அது உண்மையாக இருக்க முடியாது. கொவிட் 19 ஐ எதிர்கொள்ள தொடர்ந்தும் கடுமையான கட்டுப்பாடுகளைத் தொடரவேண்டியதில்லை. கைக்கொண்ட கட்டுப்பாடுகள், எடுக்கும் தடுப்பு மருந்துகள் ஆகியவை எந்தளவில் பயனளித்திருக்கின்றன என்ற விஞ்ஞான ரீதியிலான மதிப்பாராய்வுகளைச் செய்யவேண்டும். “
“சமூக விலகல் மனிதர்களுக்கு ஆரோக்கியமானதல்ல. மனிதர்களுக்கு அது மன அழுத்தத்தைக் கொடுத்து மனோவியாதிகளை உண்டாக்குகிறது. கல்வியைப் பாதித்து இளைய சமுதாயத்துக்குப் பெரும் இடைஞ்சலைக் கொடுத்து அவர்களின் எதிர்காலத்தைப் பல வழிகளிலும் பாதிக்கிறது,” என்று ரொபேர்ட் டிங்வால் என்ற “நிகழ்கால, எதிர்காலத் தொற்றுநோய்களைக் கையாளும் வழிவகைகள்” பற்றி ஆராயும் குழுவிலிருக்கும் விஞ்ஞானி உட்பட்டவர்கள் அக்கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
கொவிட் 19 இனிமேல் தடுப்பு மருந்துகளைப் போட்டுக்கொண்டிராத குழுக்களிடையே ஆங்காங்கு எழும் வியாதியாகும், அது அடிக்கடி எதிர்காலத்திலும் வரக்கூடும் என்பதை அந்த விஞ்ஞானிகள் குறிப்பிட்டாலும் அதற்கு இதே போன்ற கடுமையான கட்டுப்பாடுகள் இனிமேல் தேவையில்லை என்கிறார்கள். அக்கடிதத்தை எழுதியவர்களில் தொற்றுநோய், மருத்துவ ஆராய்ச்சி போன்றவைகளில் ஈடுபடும் வெவ்வேறு துறையைச் சேர்ந்தவர்கள் கையெழுத்திட்டிருக்கிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்