யூதர்களின் வருடாந்தர மதத் திருவிழாவில் நெருக்கத்தில் மிதிபட்டு இறந்தார்கள் 40 பேர்.
யூத மதப் போதகரான ஷிமோன் பார் யொச்சாயை ஒரு புனிதராக எண்ணி, அவரது கல்லறையில் வருடாவருடம் கொண்டாட்டம் நடத்துகிறார்கள் பழமைவாத யூதர்கள். மெரான் மலையிலிருக்கும் அந்தக் கல்லறையின் வருடாந்தரக் கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட நெரிசலில் இடிபட்டு, மிதிக்கபட்டு 40 பேர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்படுகிறது.
பத்தாயிரத்துக்கு மேற்பட்ட பேர் சந்தித்துக் கொண்டாடிய இந்தத் திருவிழா தான் இஸ்ராயேல் தனது நாட்டினரில் பெருபாலானவர்களுக்குக் கொவிட் 19 தடுப்பு மருந்துகளைக் கொடுத்தபின் அனுமதியுடன் கொண்டாடப்பட்ட நிகழ்வாகும். “ஞானிகளின் விழா” என்ற இந்தத் திருவிழாவில் 10,000 பேர் சந்திப்பதற்கு இஸ்ராயேலிய அரசு அனுமதி வழங்கியிருந்தது. ஆனால், சுமார் 30,000 பேரிலிருந்து 100,000 பேர் அங்கே வந்திருந்ததாக சாட்சிகள் தெரிவிக்கின்றன.
இந்தத் திருவிழாவில் ஆண்களும் பெண்களும் தனித்தனியாக ஒதுக்கப்படுகிறார்கள். அந்தக் கட்டடத்தினுள்ளிருந்த படிக்கட்டுகளில் சிலர் தடுக்கி விழுந்ததாகத் தெரிகிறது. அதனால் நெரிசல் உண்டாகவே பலர் முண்டியடித்துக்கொண்டு கீழே விழுந்தவர்கள் மீது எறி மிதித்திருக்கலாம் என்று தெரியவருகிறது. இந்த நெரிசலும் இறப்புக்களும் ஆண்களின் பகுதியிலேயே நடந்திருக்கின்றன.
விழாவில் உண்டான அழிவுகளுக்குத் தானே பொறுப்பேற்பதாக அதைக் கண்காணித்த உயர் பொலிஸ் அதிகாரி தெரிவிக்கிறார். எந்த விதமான விசாரணைகளுக்கும் தான் தயார் என்று அவர் தெரிவித்தார். இறப்புக்கள் நடந்த பின்னரும் பொலீசாரின் உத்தரவைத் துச்சமாக மதித்துப் பலர் காலையாகும் வரை அங்கே நின்று நடனமாடிக்கொண்டிருந்ததாகப் பலர் விபரித்தனர்.
விபத்து ஏற்பட்டபின் அங்கே வந்த மீட்புப்படைக்கும் உதவிகளில் ஈடுபடுவது பெரும் கஷ்டமாக இருந்ததாகத் தெரிகிறது. காரணம் அங்கிருந்தோரின் தொகையும், நெரிசலும். நடந்ததை “மிகப்பெரும் அழிவு,” என்று குறிப்பிட்ட பிரதமர் நத்தான்யாஹு காயப்பட்டோர் சுகமாகத் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
சாள்ஸ் ஜெ. போமன்