தற்காலிகமாக கொவிட் 19 தடுப்பு மருந்துகளின் கண்டுபிடிப்பு உரிமைகளை ஒதுக்கிவைப்பதை அமெரிக்க அரசு ஆதரிக்கிறது.
ஒவ்வொரு கண்டுபிடிப்புக்கும் உள்ள உரிமை அதைச் சர்வதேச அளவில் உத்தியோகபூர்வமாகப் பதிந்துகொண்டவருக்கே உரியது. இவ்வுரிமையின் கால எல்லை வெவ்வேறு துறையில் வேறுபடலாம். மருந்துக் கண்டுபிடிப்புக்களுக்கான உரிமை அதை அதைப் பதிந்துகொள்பவருக்கு 20 வருடங்களுக்கு உரியது.
தற்சமயம் உலகம் எதிர்நோக்கித் திண்டாடிக்கொண்டிருக்கும் கொவிட் 19 மருந்துகளின் உரிமைகளை அந்தந்த நிறுவனங்களே கொண்டிருக்கின்றன. அவர்களின் அனுமதி பெற்றே அந்தந்த மருந்தை வேறெவராவது தயாரிக்க முடியும். அதனால், உலக நாடுகளுக்குத் தேவையான அளவு தடுப்பு மருந்துகளை, உரிய நேரத்தில் தயாரிப்பது முடியாதிருக்கிறது. அந்த நிலையை மாற்றுவது பற்றி உலக வர்த்தக அமைப்பும், சில நாடுகளும் அந்தந்த மருந்துகளின் உரிமைகளைக் கொண்டிருப்பவர்களுடன் பேச்சுவார்த்தைகள் நடாத்திவருகின்றன. உலக மக்கள் ஆரோக்கிய அமைப்பும் இப்பேச்சுவார்த்தைகளின் மையத்தில் செயற்பட்டு வருகிறது.
கொவிட் 19 தடுப்பு மருந்துகளுக்கான காப்புரிமைகளை ஒதுக்கிவைப்பதற்கு முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பும், அவரது கட்சியினரும், மருந்துத் தயாரிப்பாளர்களும் எதிப்பாளர்கள். அமெரிக்க தேர்தல் சமயத்திலேயே டெமொகிரடிக் கட்சியினரும், ஜோ பைடனும் அத்தடுப்பு மருந்துகளின் காப்புரிமைகளைத் தற்காலிகமாக ஒதுக்கிவைத்து, அதன் மூலம் தடுப்பு மருந்துத் தயாரிப்பை உத்வேகப்படுத்தி உலகின் வறிய நாடுகளுக்கும் உதவலாம் என்ற திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்திருந்தார்கள்.
ஆனால், ஆட்சியமைத்த பின் அமெரிக்காவின் தடுப்பு மருந்துகள், உபகரணங்கள், மூலப்பொருட்கள் எவையுமே வெளியே போகலாகாது என்று ஏற்றுமதித் தடை விதித்தது பைடன் அரசு. அதன் மூலம் அமெரிக்கர்களுக்குத் தேவையான தடுப்பு மருந்துகளைத் தேக்கிவைப்பதும், அமெரிக்கர்களுக்கு வேகமாகத் தடுப்பு மருந்துகள் கொடுப்பதும் அதன் நோக்கமென்று குறிப்பிடப்பட்டது. அந்தக் குறியானது அனேகமாக நிறைவேறிவரும் சமயத்திலேயே ஜோ பைடன் அரசு மனதை மாற்றிக்கொண்டிருக்கிறது.
சர்வதேசத் தொற்றுநிலை அதிலும், முக்கியமாக, இந்தியாவின் படு மோசமான தொற்று வேகம், இறப்பு வேகம் ஆகியவையால் டெமொகிரடிக் கட்சியினரிடையேயும், அமெரிக்காவின் தொற்று நோய்ப்பரவல் ஆராய்ச்சியாளர்களிடையேயும் தடுப்பு மருந்துக் காப்புரிமையை ஒத்திவைக்கும் எண்ணத்தை உண்டாக்கியிருக்கிறது. அவர்களெல்லோரும் சேர்ந்து ஜனாதிபதி ஜோ பைடனுக்குக் கொடுத்த அழுத்தத்தின் விளைவாகவே அவர் கொவிட் 19 தடுப்பு மருந்துக் காப்புரிமைகளைத் தற்காலிகமாக ஒத்திவைக்கும் திட்டத்துக்குத் தன் ஆதரவைத் தெரிவித்திருக்கிறார்.
அமெரிக்க அரசியல் ரீதியில் இது ஒரு பிரச்சினையான விடயமாகும். பல மருந்து நிறுவனங்களைத் தன்னகத்தே கொண்ட அமெரிக்காவின் இந்த நகர்வை அந்த நிறுவனங்களும், ரிபப்ளிகன் கட்சிக்காரரும் விரும்பவில்லை. அமெரிக்கர்களுக்கு இது பொருளாதார, வர்த்தக இழப்பு என்று ரிபப்ளிகன் கட்சியினர் குரல் கொடுக்கிறார்கள்.
மருந்துத் தயாரிப்பு நிறுவனங்களோ வேறொரு முக்கிய சிக்கலையும் குறிப்பிடுகின்றன. சர்வதேச ரீதியில் தற்போது மிகப்பெரும் விற்பனைப் பொருளான கொவிட் 19 தடுப்பு மருந்துகளின் காப்புரிமையை ஒழித்துக் கட்டினால் அம்மருந்துகளைத் தயாரிப்பதற்கான தளபாடங்கள், மூலப்பொருட்களுக்கான உலகத் தேவை திடீரென்று அதிகரிக்கும். அதனால் அவைகளுக்குத் தட்டுப்பாடு உண்டாகும் நிலைமை ஏற்படும். அச்சமயத்தில் பணம் தயாரிக்கும் எண்ணத்தில் பொய்யான, தரம் குறைந்த மருந்துத் தயாரிப்புக்கள் உண்டாகி தொற்று நிலைமையை மேலும் மோசப்படுத்துவதுடன், மக்களுக்குத் தடுப்பு மருந்துகள் மீதான நம்பிக்கையையும் பலவீனப்படுத்தும் என்கிறார்கள் அவர்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்